

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், நிதி நிறுவனத்தினுள் புகுந்து பாஜக பிரமுகரை, கோயிலில் ஆடு பலி கொடுக்க பயன்படுத்தும் அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவத்தின் காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகராஜன் (38). பாஜக பிரமுகரான இவர், கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் - மகாலிங்கம் நகரில் உள்ள தனஞ்செழியன் என்பவருக்கு சொந்தமாக இருந்த கட்டிடத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பந்தப்பட்ட கட்டிடத்தை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, தனஞ்செழியனிடம் இருந்து, சின்ன ஓபுளாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான முனிரத்தினம் (68) வாங்கியுள்ளார்.
இதையடுத்து, நிதி நிறுவனத்தை காலி செய்யுமாறு, தியாகராஜனை முனிரத்தினம் வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு, நிதி நிறுவனத்தை காலி செய்ய போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என, முனிரத்தினத்திடம் தியாகராஜன் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முனிரத்தினம், நேற்று மாலை கோயிலில் ஆடு பலி கொடுக்க பயன்படுத்தும் அரிவாளுடன் நிதி நிறுவனத்தினுள் புகுந்து அரிவாளை தரையில் கூர் தீட்டி நிதிநிறுவனத்தை காலி செய்ய கோரி தியாகராஜனை, அவரது 10 வயது மகளின் கண் எதிரே வெட்ட முயன்றுள்ளார்.
அப்போது தியாகராஜன் சாதுரியமாக விலகியதால் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். மேலும், முனிரத்தினம், நிதி நிறுவனத்தினுள் இருந்த பொருட்களை தூக்கி வெளியில் வீசி எறிந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கண்காணிப்பு கேமராவில் பதிவான இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து தியாகராஜன் அளித்த புகாரில் ஆரம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான முனிரத்தினத்தை தேடி வருகின்றனர்.