

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தவெக தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில், 6 பேர் காயம் அடைந்தனர். 5 பேரை போலீஸார் கைது செய்தனர். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி நகரச் செயலாளர் சசிக்குமார் (35) தலைமையில் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சலீம் (31) மற்றும் நிர்வாகிகள் நேற்று முன்தினம் 2 கார்களில் கீழ்புதூர் பகுதியில் மரக்கன்றுகள் நடவு செய்யச் சென்றனர்.
அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த தவெக கிளைச் செயலாளர் விஜய் (எ) நாகராஜ் என்பவர், ”எனக்கு தகவல் அளிக்காமல் எப்படி மரக்கன்றுகளை நடவு செய்யலாம்” எனக் கேட்டார். இதையடுத்து, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த புதிய பாஞ்சாலியூரைச் சேர்ந்த தபு என்கிற தப்ரீஷ் (26) உள்ளிட்ட தவெகவைச் சேர்ந்த 10 பேர், நாகராஜ் மற்றும் அவருடன் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதில், தப்ரீஸ் மறைத்து வைத்திருந்த கத்தியால் நாகராஜ் தரப்பினரை வெட்டியதில், கீழ்புதூர் பார்த்திபன் (28), முருகேசன் (35), 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். இதனிடையே, இந்த மோதலை பார்த்த கீழ்புதூரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தப்ரீஸ் வைத்திருந்த கத்தியைப் பறித்து, திருப்பித் தாக்கியதில், தப்ரீஷூடன் வந்த கிருஷ்ணகிரி ராஜாஜி நகரைச் சேர்ந்த அருண் (26), ஹரிராம் (22), பாரதியார் நகர் சஞ்சய் (22) ஆகிய 3 பேர் காயம் அடைந்தனர். மோதலில் சலீம் வந்த காரின் கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தன. காயம் அடைந்த 2 தரப்பினரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக இருதரப்பினரும் தனித்தனியாகக் கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார், சலீம் தரப்பைச் சேர்ந்த தப்ரீஷ், அருண், சஞ்சய், அரிராம், விக்னேஷ் (22), சலீம் (31) ஆகிய 6 பேர் மீதும், நாகராஜ் தரப்பைச் சேர்ந்த விஜய் (39), முனி (49), வெங்கடேஷ் (25), வீரராகவன், திருவேங்கடம் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இருதரப்பிலும் விக்னேஷ், சலீம், விஜய், முனி, வெங்கடேஷ் ஆகிய 5 பேரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சிலரை தேடி வருகின்றனர்.