

சென்னை: பெசன்ட் நகரில், துரித உணவகத்தில் கொள்ளையில் ஈடுபட்ட மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். திருவல்லிக்கேணியை சேர்ந்த ஜாபர் மொய்தீன் (46), பெசன்ட் நகர், டாக்டர் நடேசன் சாலையில் துரித உணவகம் (ஃபாஸ்ட் ஃபுட்) நடத்தி வருகிறார்.
கடந்த மார்ச் 27-ம் தேதி இரவு, கடையை பூட்டிவிட்டு, மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்த போது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் வைத்திருந்த பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர், இதுதொடர்பாக, ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து, அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, 4 பேர் ஜாபர் மொய்தீனின் கடையில், பணத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இவ்வழக்கில், தலைமறைவாக இருந்த சையது நதீம் என்பவர் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய திருவல்லிக்கேணியை சேர்ந்த தஸ்தகீர் (21), சந்தோஷ் (21) ஆகிய இருவர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.