

சென்னை: பெண் வழக்கறிஞருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, உரிமையியல் நீதிபதி தேர்வு பயிற்சி மைய இயக்குநர் கைது செய்யப்பட்டார்.
வேளச்சேரி, அம்பிகா தெருவில் தனியார் உரிமையியல் நீதிபதி தேர்வு பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தை சந்திரசேகர் (50) நடத்தி வருகிறார். இங்கு சுமார் 40 பேர் படித்து வருகின்றனர். இந்த மையத்தின் சார்பில், ஆன்லைன் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
இப்பயிற்சி மையத்தில் படிக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர், வேளச்சேரி காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகார் அளித்தார். அதில், ‘பயிற்சி மையத்தின் இயக்குநர் சந்திரசேகர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்து இருந்தார்.
புகாரின் பேரில், போலீஸார் பாலியல் துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சந்திரசேகரை கைது செய்தனர்.