

சேலம்: ஈரோட்டில் ஏழைப் பெண்ணிடம் இருந்து ரூ.4 லட்சத்துக்கு ஆண் குழந்தையை வாங்கி, குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.7 லட்சத்துக்கு விற்பனை செய்த சேலம் தம்பதி உட்பட 6 பேரை சேலம் செவ்வாய்ப் பேட்டை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் நரசோதிப்பட்டியைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் (44). இவர் குகை பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் பணம் வசூல் செய்யும் பிரிவில் வேலை பார்த்து வந்தார். இவர் பண வசூலில் மோசடி செய்ததாக நிதி நிறுவன உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் செவ்வாய்ப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது, மோகன் ராஜின் செல்போனை போலீஸார் கைப்பற்றி நிதி நிறுவனத்துக்கு பணம் கட்ட வேண்டியவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்க ஆய்வு செய்தனர். போனில், பச்சிளம் குழந்தைகளின் புகைப்படங்கள் அதிகளவில் இருந்துள்ளன. இதனால், சந்தேகம் அடைந்த போலீஸார் மோகன் ராஜை விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குழந்தைகளை வாங்கி விற்கும் கும்பலுடன் சேர்ந்து பச்சிளம் குழந்தைகளை வாங்கி குழந்தை இல்லாதவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
கடந்த மாதம் ஈரோட்டைச் சேர்ந்த பெண்ணிடம் இருந்து ஆண் குழந்தையை மோகன் ராஜ், அவரது மனைவி நாக சுதா மற்றும் கூட்டாளிகளான குமாரபாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி, ஈரோட்டைச் சேர்ந்த பர்வீன், பத்மாவதி, ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பணம் கொடுத்து வாங்கி விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக குழந்தையின் தாயிடம் ரூ.4 லட்சம் கொடுத்துள்ளனர். பின்னர் விலைக்கு வாங்கிய ஆண் குழந்தையை, குழந்தை இல்லாத தம்பதிக்கு ரூ.7 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதேபோல, மேலும் பல குழந்தைகளை மோகன்ராஜ் உள்ளிட்ட கும்பல் விலைக்கு வாங்கி பலருக்கு விற்பனை செய்து வந்துள்ளதும் தெரியவந்தது.
குழந்தைகளை வாங்கி விற்பனை செய்த வழக்கில் மோகன்ராஜ், நாக சுதா, ஸ்ரீதேவி, பர்வீன், பத்மாவதி, ஜனார்த்தனன் ஆகிய 6 பேரை செவ்வாய்ப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். மேலும், குழந்தைகளை தாயிடம் இருந்து வாங்கி விற்பனை செய்தது குறித்தும், குழந்தைகளை கடத்தி விற்பனை செய்துள்ளனரா என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.