

குன்னூர்: ஊட்டி-குன்னூர் சாலையில் பாய்ஸ் கம்பெனி அருகே, அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி கவிழ்ந்தது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து, குன்னூர் நோக்கி டிப்பர் லாரி வந்தது. பெருந்துறையில் இருந்து 55 பயணிகளுடன், ஊட்டியை நோக்கி அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 3 மணியளவில், பாய்ஸ் கம்பெனி அருகே அதிவேகத்தில் வந்த டிப்பர் லாரி திடீரென பிரேக் பிடித்ததால் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர், அருகில் இருந்த தடுப்பின் மீது மோதி சாலையின் குறுக்கே, கவிழும் நிலையில் நின்றது.
அதே நேரத்தில் அரசு பேருந்து மீது மோதாமல் இருந்ததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலின்பேரில், வெலிங்டன் மற்றும் அருவங்காடு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால், ஊட்டி-குன்னூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.
இதே போல, பிக் அப் வாகனம் ஒன்று வெலிங்டன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக, இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மழை பெய்து வருவதால் வாகனங்களை மித வேகத்தில் இயக்க வேண்டும் என, போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.