

சென்னையில் பல்வேறு இடங்களில் பொதுமக்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 5 சிறுவர்கள் உள்பட 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை எருக்கஞ்சேரி திருவள்ளுவர் நகர் 5-வது பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் நவீன் இன்ஃபன்ட் (20). பர்மா பஜாரில் செல்போன் சர்வீஸ் கடையில் பணிப் புரிந்து வரும் இவர், கடந்த 19-ம் தேதி தனது நண்பருடன் சர்மா நகர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் நவீனை வழிமறித்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அவரை தாக்கி பைக்கை பறித்து விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து, நவீன் வியாசர்பாடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தி, பைக்கை பறித்து சென்ற 17 வயதான 2 சிறுவர்களை கைது செய்து, சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல், பெருங்குடியை சேர்ந்த ஆதித்யா (21) கடந்த 15-ம் தேது தனது காரில் ஓஎம்ஆர் சாலையில் வந்து கொண்டிருந்தார். திடீரென காரின் பம்பர் கீழே உரசிய சத்தம் கேட்டு, காரை நிறுத்தி கீழே இறங்கி வந்து பார்த்த போது, அங்கு 2 பைக்குகளில் வந்த 6 பேர், ஆதித்யாவிடம் செல்போன் மற்றும் கார் சாவியை கேட்டு மிரட்டி உள்ளனர். ஆதித்யா சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் வருவதை கண்ட 6 பேரும் தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து, ஆதித்யா அளித்த புகாரின் பேரில், தரமணி போலீஸார், பெருங்குடியை சேர்ந்த முகேஷ் (20), சங்கர் (20), ஸ்ரீகாந்த் (21) மற்றும் 3 சிறுவர்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த காளிதாஸ் (33), அம்பத்தூரில் தான் பணிபுரியும் ஓட்டலில் வேலையை முடித்து விட்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடந்த 19-ம் தேதி படுத்து உறங்கி கொண்டிருந்தார். அப்போது, காளிதாஸை பீர் பாட்டிலால் தாக்கி, அவரது செல்போனை பறிக்க முயன்ற கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தினகரனை (20) போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலு (46), சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், தான் வேலை செய்யும் ஓட்டலின் வெளியே செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு, வந்த 2 பேர் வேலுவை தாக்கி செல்போனை பறித்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து, வேலு அளித்த புகாரின் பேரில், செல்போனை பறித்து சென்ற புளியந்தோப்பை சேர்ந்த பரத் (20), பல்லவன் சாலையை சேர்ந்த அஜய் குமார் (20) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வழிப்பறி சம்பவத்தில் 5 சிறுவர்கள் உள்பட 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.