

திருப்பூர் அருகே நாச்சிபாளையம் பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த 17-ம் தேதி முகமூடி அணிந்த நபர், கையில் அரிவாளுடன் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தார். செல்லும் வழியில் உள்ள வீடுகளின் கதவுகளை அரிவாளால் தட்டியபடியே அந்நபர் சென்றதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சிலர் வெளியே வந்து பார்த்தபோது, முகமூடி அணிந்த நபர் சுற்றித்திரிவதை கண்டு சத்தமிட்டனர்.
அவர்களை அரிவாளால் காட்டி மிரட்டிவிட்டு அந்நபர் அங்கிருந்து தப்பினார். மறுநாள் காலை சாலையில் அரிவாள் கிடந்தது. இது தொடர்பான தகவலின்பேரில், அவிநாசிபாளையம் போலீஸார் அங்கு வந்து, அப்பகுதியில் இருந்த வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். அதில் மர்மநபர் நடமாட்டம் உறுதியானது.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, “ஏற்கெனவே எங்கள் பகுதியில் ஒரே குடும்பத்தை 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து பலரும் மீளாத நிலையில், தற்போது மர்ம நபரின் நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்துள்ளோம். போலீஸார் தொடர்ச்சியாக ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ்யாதவ் கூறியதாவது: அவிநாசி பாளையம் எல்லைக்கு உட்பட்ட ஜிஎன் கார்டன் குடியிருப்புப் பகுதியில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞரை அடையாளம் கண்டு, அவரை பிடித்து விசாரித்தோம். அவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், மணியம்பாளையத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. கோவை தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது.
சம்பவத்தன்று பெற்றோரிடம் உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்வதாக கூறிவிட்டு, அரிவாளை எடுத்துக் கொண்டு சம்பவ இடத்தில் சுற்றித்திரி ந்தார். அவரது பெற்றோரிடம் பேசி அனுப்பி வைத்துள்ளோம். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார், என்றார்.