

சென்னை: குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுப்பது தொடர்பான நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னையில் 30 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பின்னர், சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
குற்ற வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த ரவுடிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். வெளி மாநிலம் சென்று பதுங்கிய ரவுடிகளும் தனிப்படை மூலம் பிடிக்கப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், இருதரப்பு ரவுடிகள் மோதி விடக்கூடாது, முன் விரோத கொலைகள் நடந்து விடக்கூடாது என்பதை ரவுடி ஒழிப்பு பிரிவு போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக ரவுடிகளை அவர்கள் செய்த குற்றச் செயல்களை அடிப்படையாக வைத்து வகைப்படுத்தி அவர்கள் மீதான கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை மேலும் முடுக்கிவிடப்பட்டது. அதன்படி பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய சுமார் 30 ரவுடிகள், குற்றப் பின்னணி கொண்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இவர்களில் பாம் சரவணனின் கூட்டாளி எனக் கருதப்படும் புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த ஜெயசீலன் (31) என்பவரும் பிடிபட்டார்.
ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் எனக் காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார். மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அவர்கள் குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.