

அரூர்: பொம்மிடி அருகே பள்ளி சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர் உள்ளிட்ட 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சுங்கர அள்ளியைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன் (22), கெட்டூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் செந்தமிழ் (19) ஆகிய இருவரும், 17 வயதுடைய 2 பள்ளி சிறுமிகளை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அவர்களுடன் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளனர்.
பின்னர் ஆசை வார்த்தை கூறி, சிறுமிகளிடம் ஆன்லைன் மூலம் வீடியோ காலில் பேசியபடியே, அவர்களை ஆபாசமாக பதிவு செய்துள்ளனர். அந்த படங்களை பெத்தானூரைச் சேர்ந்த ஓட்டுநர் வெங்கடேஷ் (24) என்பவருக்கு அனுப்பி உள்ளனர். பின்னர் ஒருஇடத்தைக் குறிப்பிட்டு, அந்த சிறுமிகளிடம், “உங்களின் ஆபாச படம் இருக்கிறது. நீங்கள் உடனே அங்கு வரவேண்டும். இல்லையெனில் சமூக வலைதளத்தில் பரப்பி விடுவோம்’ என மிரட்டியுள்ளனர். பின்னர், வாட்ஸ்அப் குரூப்பில் சிறுமிகளின் ஆபாச படத்தை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து சிறுமிகள் தரப்பில் அளித்த புகாரின்பேரில் பொம்மிடி போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சரவணன், செந்தமிழ், வெங்கடேஷ் ஆகி யோரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.