மார்க்சிஸ்ட் - இந்து முன்னணி மோதல்; பாஜக நிர்வாகி மண்டை உடைந்தது - நடந்தது என்ன?

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்து முன்னணியினரிடையே ஏற்பட்ட மோதல். (அடுத்த படம்) கைகலப்பில் மண்டை உடைந்து ரத்தம் வழிந்த நிலையில், பாஜக மாவட்டத் துணைத் தலைவர் பாலமுருகன்.(கடைசி படம்) திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மோதிக் கொண்ட இருதரப்பினர்.
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்து முன்னணியினரிடையே ஏற்பட்ட மோதல். (அடுத்த படம்) கைகலப்பில் மண்டை உடைந்து ரத்தம் வழிந்த நிலையில், பாஜக மாவட்டத் துணைத் தலைவர் பாலமுருகன்.(கடைசி படம்) திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மோதிக் கொண்ட இருதரப்பினர்.
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கைகலப்பாக மாறியது.

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் மத்திய, மாநில அரசுகள் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சரத்குமார், முருகன் மாநாடு குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த இந்து முன்னணி நிர்வாகி வினோத் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கம்யூனிஸட் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அங்கு வந்த தாடிக்கொம்பு போலீஸார் இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தி கலைந்துபோகச் செய்தனர்.

இந்த கைகலப்பில் காயமடைந்த கம்யூனிஸ்ட் நிர்வாகி சரத்குமார் (35), சண்முகவேல் (45) மற்றும் இந்து முன்னணி நிர்வாகி வினோத் (30), சக்திவேல் (30) ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தாடிக்கொம்பு போலீஸார், இந்து முன்னணி அமைப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி திண்டுக்கல் - பெங்களூரு நான்கு வழிச்சாலை தாடிக்கொம்பில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சிபின்சாய் சவுந்தர்யன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கலைந்துபோகச் செய்தார்.

திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் சம்பவ இடத்துக்கு வந்து விபரம் கேட்டறிந்தார். தொடர்ந்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் கம்யூனிஸ்ட் நிர்வாகிகளும், இந்து முன்னணி அமைப்பு நிர்வாகிகளும் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர்.

இதற்கிடையே, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் நிர்வாகி சரத்குமாரைப் பார்க்க அவரது கட்சியினரும், இந்து முன்னணி நிர்வாகி வினோத்தைப் பார்க்க இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கும் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் பாஜக மாவட்ட துணைத்தலைவர் பாலமுருகன் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. போலீஸார் இருதரப்பினரையும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றினர். வெளியே வந்த பின்னரும் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை சமாதானப்படுத்திய திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார், இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த மாவட்ட எஸ்.பி. பிரதீப், மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பது குறித்து பிரச்சினை நடந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in