

சென்னை: பிரபல ரவுடி மிளகாய்ப் பொடி வெங்கடேசன் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். செங்குன்றம், பாடியநல்லூரைச் சேர்ந்தவர் கே.ஆர் வெங்கடேசன் என்ற மிளகாய் பொடி வெங்கடேசன். செங்குன்றம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.
இவர் மீது ஆவடி காவல் ஆணையகரத்தில் 5 வழக்குகளும், ஆந்திர மாநிலத்தில் 49 வழக்குகளும் உள்ளன. இந்நிலையில், இவர் மீது கடந்த 12-ம் தேதி, முகலிவாக்கம், குமுதம் நகரைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி (41) என்பவர், செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், மிளகாய் பொடி வெங்கடேசன் தன்னை மிரட்டி ரூ.1 லட்சம் முன்பணமாக வாங்கியதாகவும், மேலும், ரூ.12 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் வெங்கடேசன் கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இவர் மீது மிரட்டி பணம் பறித்தல், கட்ட பஞ்சாயத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். வெங்கடேசன், தமிழக பாஜக இதர பிற்படுத்தப்பட்டோர் அணி மாநில செயலாளராக இருந்தார். அவரை கடந்த 14-ம் தேதி கட்சியை விட்டு, மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நீக்கினார்.