

சென்னை: கோக்கைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஆப்ரிக்க இளைஞர், கூட்டாளியுடன் சென்னையில் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க, போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார், கடந்த 17-ம் தேதி இரவு, நுங்கம்பாக்கம், வானிலை ஆராய்ச்சி மையம் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்தனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இளைஞரிடம் விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.
இதையடுத்து, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில், விற்பனைக்காக கோக்கைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், அதை வைத்திருந்த சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப்குமாரை (38) கைது செய்தனர்.
அவர் அளித்த தகவலின் பேரில், மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஜான் (38) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.