

திருப்பூர்: பல்லடம் அருகே பனியன் நிறுவனத்தில் உரிய ஆவணங்களின்றி பணியாற்றிய வங்க தேசத்தினர் 26 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் பல்லடம் அடுத்த குன்னாங்கல்பாளையத்தில் ஷாரூக் ருபென் மேதா, அவரது மனைவி நளினி ஆகியோர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். இங்கு ஏராளமான வட மாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிலையில், வங்கதேச நாட்டைச் சேர்ந்த சிலர் பணிபுரிவதாக திருப்பூர் க்யூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீஸார் விசாரணை நடத்தியதில், உரிய ஆவணங்களின்றி வங்கதேசத்தைச் சேர்ந்த 26 பேர் அந்நிறுவனத்தில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அனைவரும் பல்லடம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: உரிய ஆவணங்களின்றி 26 வங்க தேசத்தினர் பனியன் நிறுவனத்தில் தங்கிப் பணியாற்றியது விசாரணையில் தெரியவந்தது. 20 பேர் கடந்த 5 மாதங்களாகவும், 6 பேர் கடந்த 3 ஆண்டுகளாகவும் திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கி, வேலை செய்துள்ளனர்.
வெளிநாட்டு வாழ் தடை சட்டத்தின் கீழ் 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வங்கதேச நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்களில் 6 பேரிடம் போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன" என்றனர். பல்லடம் பகுதியில் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு வங்க தேசத்தினர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.