சென்னை, கோவையில் 4 பேர் கைதான விவகாரம்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் திரட்டியது அம்பலம்

சென்னை, கோவையில் 4 பேர் கைதான விவகாரம்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் திரட்டியது அம்பலம்

Published on

சென்னை, கோவையில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆட்களை திரட்டி மூளைச் சலவை செய்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

கோவை உக்கடம் கோட்டைமேடு சங்கமேஸ்வரன் கோயில் அருகே கடந்த 2022-ம் ஆண்டு அக்.23-ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில், காரை ஓட்டி வந்த ஜமேசா முபின் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் மாநில போலீஸார் விசாரித்து வந்த நிலையில் வழக்கு என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கார் வெடிப்பு தொடர்பாக 15-க்கும் மேற்பட்டோரை என்ஐஏ அதிகாரிகள் அடுத்தடுத்து கைது செய்தனர்.

தொடர்ந்து கோவை குனியமுத்தூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் அரபிக் கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது அக்கல்லூரியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆதரவு தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் கடந்தாண்டு 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் மீண்டும் கோவை வந்தனர். போத்தனூர் திருமறை நகர் பகுதியைச் சேர்ந்த அகமது அலி, உக்கடம் புல்லுக்காடு பகுதியைச் சேர்ந்த ஜவஹர் சாதிக் ஆகிய இருவரை கைது செய்தனர். அகமது அலி அரபிக் கல்லூரியின் முதல்வராகவும், ஜவஹர் சாதிக் அக்கல்லூரியில் ஊழியராகவும் பணி செய்து வந்தனர்.

இவர்கள் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த ஷேக் தாவூத், திண்டுக்கல்லை சேர்ந்த ராஜா அப்துல்லா ஆகிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வேலை இல்லாமல் தவிப்பவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், ஒரு குறிப்பிட்ட மத கோட்பாட்டில் தீவிரம் காட்டுபவர்கள் என பல தரப்பட்டவர்களை குறிவைத்து மூளைச் சலவை செய்து ஐஎஸ்ஐஎஸ் பங்கரவாத அமைப்புக்கு ஆள் திரட்டியது தெரியவந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவர்களின் பின்னணியில் மேலும் சிலர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் குறித்த விவரங்களையும் என்ஐஏ அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in