

கடலூர் மாவட்டம், ரெட்டிச்சாவடி அருகில் உள்ள கீழ் அழிஞ்சிப்பட்டில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் மொத்தம் 28 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இதில் கீழ் அழிஞ்சிபட்டு, மேட்டுத் தெருவைச் சேர்ந்த கனகராஜ் மகள் பிரியதர்ஷினி (7) என்ற சிறுமி, இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 16-ம் தேதி காலை 8 மணிக்கு, பள்ளிக்கு வந்த பிரியதர்ஷினி, பள்ளியின் அருகே உள்ள கடையில், அவருடன் பயிலும் சக மாணவியுடன் சென்று ஜெல்லி மிட்டாய் வாங்கி சாப்பிட்டுள்ளார். பின்னர் பள்ளியில் காலை வழிபாட்டு கூட்டம் ஆரம்பிக்கும் முன்னர் பிரியதர்ஷினி பள்ளி வளாகத்தில் வாந்தி எடுத்து, மயங்கியுள்ளார்.
மயங்கிய மாணவியை பள்ளி வராண்டாவில் படுக்க வைத்த தலைமையாசிரியர் (பொறுப்பு) ரேவதி, ஆசிரியர்களிடம் இருசக்கர வாகனம் இல்லாததால் அந்த வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற அந்த கிராமத்தை சேர்ந்த இருவரை அழைத்து, பிரியதர்ஷினியை அவரது வீட்டில் கொண்டு விடுமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை பிரியதர்ஷினியை அவரது தாயார் பெரியகாட்டுபாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ந்துள்ளார். சிறுமியின் நாடித்துடிப்பு மிகவும் குறைவாக இருந்ததால், மேல் சிகிச்சைக்கு புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் கோமாவில இருந்துள்ளார். இதற்கிடையே நேற்று மதியம் பிரியதர்ஷினி உயிரிழந்தார்.
இந்த நிலையில் தலைமை ஆசிரியர் ரேவதி, மாணவி பிரியதர்ஷினியை மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்காமல் அலட்சியமாக இருந்த காரணத்தால் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீரப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மாணவியின் இறப்பு குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.