

விழுப்புரத்தில் போலீஸ் எனக்கூறி, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 20 வயது இளம்பெண், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். உடல்நிலை சரியில்லாததால், சென்னையில் இருந்து விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்துக்கு நேற்று முன்தினம் அதிகாலை வந்துள்ளார். ஏற்கெனவே தனது கைப்பேசி மூலமாக அழைப்பு விடுத்து, புதிய பேருந்து நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு காத்திருந்த உறவினர் மகனான தன் காதலனுடன் அந்தப் பெண் இருசக்கர வாகனத்தில், பெரம்பலூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தை கடந்த நிலையில், முகக்கவசம் அணிந்து, இருவரையும் பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் வழிமறித்துள்ளார். பின்னர் அவர், தன்னை போலீஸ் என கூறிக் கொண்டு அவர்களிடம் விசாரித்துள்ளார். இதில் இருவரும் காதல் ஜோடி என்பதை உறுதி செய்தவர், உறவினர் மகனை அடித்து விரட்டிவிட்டு, இளம்பெண்ணை மட்டும் தன்னுடன் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.
செல்லும் வழியில் பணம் கேட்டு மிரட்டவே, விழுப்புரம் தந்தை பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து, அந்த இளம் பெண் கொடுத்துள்ளார். இதையடுத்து, ஜானகிபுரம் புறவழிச்சாலை பகுதிக்கு சென்றதும், அந்த நபர் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து, இளம்பெண் கூச்சலிடவே, போலீஸ் ஆசாமி தப்பித்து சென்றுள்ளார். இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஜானகிபுரம் புறவழிச் சாலை வரை உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
தொடர் விசாரணையில், போலீஸ் எனக்கூறி, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கஞ்சனூர் அருகே உள்ள சித்தேரி கிராமத்தில் வசிக்கும் கார் ஓட்டுநரான லாரன்ஸ் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, கோலியனூரில் உள்ள தனது மாமியார் வீட்டில் பதுங்கி இருந்த லாரன்ஸை கைது செய்தனர். இவர் மீது சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் செல்போன் திருட்டு வழக்கு உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.