

பூந்தமல்லி: திருமண மோசடி செய்ததாக சின்னத்திரை நடிகை மீது அவரது கணவர் அளிக்கப்பட்ட புகார் மீதான விசாரணைக்காக நேற்று கணவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் நேரில் ஆஜரான நிலையில், சின்னத்திரை நடிகை வராததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, போரூரை அடுத்த கொளப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபரான ராஜ்கண்ணன், சமீபத்தில் பூந்தமல்லி காவல் நிலையத்தில், பூந்தமல்லி-கரையான்சாவடியில் வசிக்கும் சின்னத்திரை நடிகை ரெகானா பேகம், முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டதாக பொய் கூறி, தன்னை திருமண செய்து ரூ.20 லட்சம் வரை பணம், நகைகளை பெற்று ஏமாற்றியதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீஸார், ராஜ்கண்ணன், ரெகானா பேகம் இருவரையும் ஜூன் 18-ம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். இதையடுத்து ராஜ் கண்ணன் தன் வழக்கறிஞர்களுடன் நேற்று விசாரணைக்காக பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஆஜரானார்.
அப்போது, அவர் தன்னிடம் இருந்த ஆவணங்கள், ரெகானா பேகம் மொபைல் போனில் பேசிய உரையாடல் ஆகியவற்றை போலீஸாரிடம் காண்பித்தார். அதே நேரத்தில், சின்னத்திரை நடிகை ரெகானா பேகம் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஆகவே, தன் புகார் தொடர்பாக நீதிமன்றத்தை நாடி நடவடிக்கை எடுத்துக் கொள்வதாக ராஜ்கண்ணன் காவல் நிலையத்தில் எழுதி கொடுத்துவிட்டு சென்றார்.
அப்போது, செய்தியாளர்களிடம் ராஜ்கண்ணன் கூறும்போது, “என்னை திருமணம் செய்து ரெகானா பேகம் மோசடி செய்துள்ளார். என்னை மட்டுமல்லாது, கோயம்புத்தூரை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரிடமும் நிலம், கார் ஆகியவற்றை பெற்றுள்ளார்.
மான நஷ்ட வழக்கு: அவர் என் மீது பல வழக்குகள் இருப்பதாக கூறுகிறார். என் மீது ஒரு வழக்கு தான் உள்ளது. அந்த வழக்கும் முடியும் தருவாயில் உள்ளது. ரெகானா பேகத்தின் மீது விரைவில் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர போகிறேன்.’’ என்றார்.