

வாணியம்பாடி: வாணியம்பாடியில் தொழிலதிபர் வீட்டில் நுழைந்து ஆட்களை கட்டிப்போட்டு நகை, பணம் திருட முயன்ற வழக்கில் ஆந்திர மாநில காவலர், வீட்டு வேலைக்காரர் உட்பட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நீலிக்கொல்லை புதுத்தெருவைச் சேர்ந்தவர் இம்தியாஸ் (50). இவர், தோல் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது மனைவி சபீதா குல்சும் (43). இவர்களது மகன் லண்டனில் வசித்து வருகிறார். மகனை பார்க்க இம்தியாஸ் தனது மனைவியுடன் அவ்வப்போது லண்டன் சென்று வருவது வழக்கம்.
இவரது வீட்டில் வாணியம்பாடி அண்ணா நகரைச் சேர்ந்த சக்திவேல் (34) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இம்தியாஸ் தனது மனைவியுடன் வீட்டில் இருந்தார். அப்போது, வேலைக்காரர் சக்திவேல் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வெளியே சென்றார். பின்னர், அரை மணி நேரம் கழித்து அவர் வீடு திரும்பியபோது, அவரை பின் தொடர்ந்து அதிரடியாக அடையாளம் தெரியாத 4 பேர் இம்தியாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.
இதை எதிர்பார்க்காத இம்தியாஸ் யார் நீங்கள் என கேட்டபோது, மர்ம நபர்கள் இம்தியாஸை தாக்கினர். இதனை தடுக்க வந்த சக்திவேலையும் தாக்கி 2 பேரையும் பிளாஸ்டிக் டேப் மூலம் கை, கால் மற்றும் வாயில் டேப் ஒட்டி கட்டிப்போட்டனர். சத்தம் கேட்டு அங்கு வந்த சபீதாகுல்சுமை கத்தி முனையில் மிரட்டிய மர்ம நபர்கள் வீட்டில் எங்கே பீரோ உள்ளது ? அதில் நகைகள், பணம் எங்கே என காட்டுமாறு மிரட்டியுள்ளனர்.
கணவர் மற்றும் வேலைக்காரர் இருவரும் கட்டிப்போட்டு கத்தி முனையில் மர்ம நபர்கள் மிரட்டியதால், மிரண்டு போன சபீதாகுல்சும் வீட்டில் இருந்த அறைகளையும், அங்குள்ள பீரோவை திறந்து காட்டினார். உடனே, மர்ம நபர்கள் பீரோவில் நகை, பணத்தை தேட தொடங்கினர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சபீதாகுல்சும் அங்கிருந்து தப்பியோடி பக்கத்து வீட்டில் உறவினர் வீட்டுக்கு சென்று விவரத்தை கூறினார். உடனே, அக்கம், பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.
பொதுமக்கள் வருவதை அறிந்த மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்த கத்தி, அரிவாள், கயிறு, ஸ்ப்ரே, சுத்தியல் ஆகியவற்றை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவானது.
இது குறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் இம்தியாஸ் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டு வேலைக்காரர் சக்திவேல் மீது காவல் துறையினருக்கு ஆரம்பத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரிடம் நடத்திய கிடுக்குப்பிடியான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘இது குறித்து காவல் துறையினர் கூறும்போது, ‘‘ தோல் தொழிலதிபர் வீட்டில் வேலை செய்து வந்த சக்திவேலின் நெருங்கிய நண்பர் திருப்பத்தூர் அடுத்த கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த இளவரசன் (45). இவர்கள், 2 பேரும் இம்தியாஸ் வீட்டில் நகை, பணத்தை திருட திட்டமிட்டனர்.
அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவதால் இம்தியாஸ் வீட்டில் நிறைய பீரோ இருப்பதாகவும், அதில் நகை, பணம் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக சக்திவேல் தனது நண்பரிடம் கூறியதை தொடர்ந்து நகை, பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டனர்.
இந்த திட்டத்தை ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த சாந்தகுமாரிடம் (40) தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, சாந்தகுமாரி தனது நண்பரும், ஆந்திர மாநில காவல் துறையில் காவலராக பணியாற்றி வரும் அருண்குமார் (44) என்பவரிடம் இந்த விவரத்தை தெரிவித்தார். உடனே, இம்தியாஸ் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடிக்க அருண்குமார் திட்டம் வகுத்தார்.
அதன்படி, கூலிப்படையை அனுப்பி இம்தியாஸ் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடிக்க அருண்குமார் திட்டம் வகுத்தார். இதில், சக்திவேல் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதால் வந்த மர்ம நபர்கள் இம்தியாஸூடன், சக்திவேலையும் கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இந்த தகவலை சக்திவேல் காவல் துறையினரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட ஆந்திர மாநில காவலர் அருண்குமார், அவரது தோழி சாந்தகுமாரி, திருப்பத்தூரைச் சேர்ந்த இளவரசன், வேலைக்காரர் சக்திவேல் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளோம், இதில், தலைமறைவாக உள்ள கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரை தேடி வருவதாக’’ காவல் துறையினர் தெரிவித்தனர்.