

கோவா: பெங்களூரைச் சேர்ந்த 22 வயது பெண்ணின் சடலம் தெற்கு கோவாவில் உள்ள காட்டில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அப்பெண்ணை அவரின் காதலர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் தெற்கு கோவாவில் உள்ள பிரதாப் நகர் காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். போலீஸார் அப்பகுதிக்கு சென்றதில், இளம் பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அதன்பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பெண் கர்நாடகாவின் வடக்கு பெங்களூருவைச் சேர்ந்த ரோஷ்னி மோசஸ் என்பது தெரியவந்தது. அப்பெண்ணை கொலை செய்தவர் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சய் கெவின் என்பதும் கண்டறியப்பட்டது.
திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்துடன் இந்த ஜோடி பெங்களூருவிலிருந்து கோவாவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது, ஆனால் அவர்களுக்கிடையேயான தகராறு கொலையில் முடிந்தது. கொலை செய்த பிறகு, சஞ்சய் பெங்களூருக்குத் திரும்பிச் சென்றுவிட்டார் என்பதும் உறுதியானது.
இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் (தெற்கு கோவா) டிகம் சிங் வர்மா தெரிவித்த தகவல்களின்படி, “இந்த ஜோடி சமீபத்தில் திருமணம் செய்து கொள்ள பெங்களூருவிலிருந்து கோவா வந்தனர். ஆனால் ஏதோ தெரியாத காரணத்தால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு சஞ்சய் ரோஷ்னியைக் கொன்று காட்டில் வீசிவிட்டார்.
திங்கட்கிழமை மாலை தெற்கு கோவாவில் உள்ள பிரதாப் நகர் காட்டுப் பகுதியில் ரோஷ்னியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சடலம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் விசாரணையைத் தொடங்கினர். குற்றம் கண்டுபிடிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சஞ்சய் பெங்களூருவில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்றார்