

திருப்பூர்: பல்லடம் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள நான்கு சாலை சந்திப்பில் இன்று (ஜூன் 17) கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, திரும்பும் போது அடியோடு சாய்ந்ததில் சாலையோரமாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த தாயும், மகளும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி பகுதியில் நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இங்கு இன்று மதியம் கன்டெய்னர் லாரி ஒன்று கோவையிலிருந்து பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது நகராட்சி பகுதியில் லாரி நின்று கொண்டிருந்தபோது, சிக்னல் விழுவதை அறிந்த ஓட்டுநர் லாரியை வேகமாக திருப்பி உள்ளார். இதில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி, நகராட்சி அலுவலகம் முன்பு தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் சாலையோரமாக நகராட்சி அலுவலகம் முன்பு வந்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் கன்டெய்னருக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். அப்போது பெண்களின் அலறல் சத்தம் கேட்டு சாலையில் நின்றிருந்தவர்கள் அங்கு திரண்டனர். கன்டெய்னர் அதிக பாரத்தோடு இருந்ததால் 3 கிரேன்கள் உதவி மூலம் உடல்கள் நசுங்கிய நிலையில் மீட்கப்பட்டன. கிரேன்கள் உதவியுடன் கன்டெய்னர் அப்புறப்படுத்தப்பட்டது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், திருப்பூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த மகாராணி (55) மற்றும் கிருத்திகா (35) ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரியின் ஓட்டுநர் விபத்து நடந்ததும் அங்கிருந்து மாயமானார். அவரை தேடும் பணியில் பல்லடம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், விபத்து நடந்தபோது அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த விபத்தால் திருச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது தொடர்பாக பல்லடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.