

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பெயரில் ஓட்டல் மேலாளருக்கு போலியாக மெசேஜ் அனுப்பி ரூ.20 லட்சம் மோசடி செய்த வழக்கில் வட மாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் புகழ் பெற்ற பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவர் மோனார்க் குழும நிறுவனங்களை நடத்தி வருகிறார். எம்பியாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான, ஊட்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் மேலாளரின் செல்போனுக்கு 13-1-25 அன்று வாட்ஸ்-அப் செயலியில் குறுஞ்செய்தி வந்தது. அதில், ‘குன்னூரில் முக்கிய விஷயமாக பணியில் இருக்கிறேன். நான் இருக்கும் இடத்தில் செல்போன் சிக்னல் பிரச்சினை உள்ளது. எனவே, ஓட்டல் சம்பந்தமான வங்கி கணக்குகளில் எவ்வளவு பணம் உள்ளது என்றும், அந்த பணத்தை நான் அனுப்பும் வங்கி கணக்குக்கு அனுப்புமாறும் குறிப்பிடப்பட்டிருந்து.
வழக்கமாக மிதுன் சக்கரவர்த்தி, ஓட்டல் மேலாளரை தாதா என்று அழைப்பது வழக்கம். அந்த பெயரில் வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி வந்ததால், மேலாளருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. இதனால் உடனே பதில் அளித்த மேலாளர், ‘ஓட்டலுக்கு சொந்தமான பல்வேறு வங்கி கணக்குகளில் ரூ.70 லட்சமும், நிரந்தர வைப்புத் தொகையாக ரூ.30 லட்சமும் உள்ளது’ என்று கூறினார்.
இதில் முதல் கட்டமாக ரூ.20 லட்சத்தை உடனடியாக அனுப்புமாறு வாட்ஸ்-அப் செயலியில் வங்கி கணக்கு விவரங்களுடன் பதில் வந்தது. இதை நம்பிய மேலாளர், வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி விட்டார். இதையடுத்து நிரந்தர வைப்பு தொகையில் உள்ள ரூ.30 லட்சத்தையும், அதன் பின்னர் மற்ற கணக்குகளில் உள்ள ரூ.50 லட்சத்தையும் அனுப்புமாறு வாட்ஸ்-அப் செயலியில் குறுஞ்செய்தி வந்திருக்கிறது.
இதற்கிடையில் ஏதேச்சையாக மிதுன் சக்கரவர்த்தி, மேலாளரை தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது நீங்கள் கூறியபடி ரூ.20 லட்சத்தை, உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி விட்டேன் என்று மேலாளர் கூறியபோது தான், மோசடி நடந்தது அவருக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நிரந்தர வைப்பு தொகையில் இருந்த பணம் மற்றும் மற்ற கணக்குகளில் இருந்த பணத்தையும் அனுப்ப எடுத்த நடவடிக்கைகளை உடனடியாக மிதுன் சக்கரவர்த்தி தடுத்து நிறுத்தினார். இதனால் ரூ.80 லட்சம் தப்பியது. இது குறித்து நீலகிரி சைபர் க்ரைம் ஆய்வாளர் பிரவீனா தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவத்தில் தன்னுடைய சகோதரியின் வங்கிக் கணக்கு விவரங்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ரவீன்குமார் (35) என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 95 ஆயிரத்து 500-ஐ நீலகிரி போலீஸார் கைப்பற்றி உள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.