

சென்னை: காதல் திருமண விவகாரத்தில் சிறுவனை கடத்த உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கூடுதல் டிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேவேளையில், தன்னை கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நாளை பட்டியலிட்டு விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்தார். சீருடையில் நேரில் ஆஜரான ஆயுதப்படை ஏடிஜிபி ஜெயராம், நீதிபதி உத்தரவின் பேரில் உயர் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார்.
“இந்த வழக்கில் ஏடிஜிபிக்கு தொடர்பு இருப்பது கண்கூடாக தெரிந்தும், அவரது பெயரை எஃப்ஐஆரில் ஏன் சேர்க்கவில்லை. உயர் அதிகாரி என்பதால் காப்பாற்ற நினைக்கிறீர்களா. அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே, ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து, அவரிடம் போலீஸார் விசாரிக்க வேண்டும்.
அதேபோல, எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியும் கூட்டத்தை கூட்டாமல் தனியாக போலீஸ் விசாரணைக்கு சென்று ஒத்துழைப்பு தரவேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். ஏடிஜிபி ஜெயராமை உயர் நீதிமன்றத்திலேயே போலீஸார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனுடன் டிஜிபி சங்கர் ஜிவால் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில், ஏடிஜிபி ஜெயராம் தரப்பில் உச்ச நீதிமன்றத்திடம் முறையிடப்பட்டுள்ளது.
யார் இந்த ஜெயராம்? - கைதுக்குப் பின் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் கர்நாடகாவில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். எம்.ஏ., எம்.பில் படித்தவர். 1996 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக தமிழக பிரிவில் பொறுப்பேற்றார். நாமக்கல், தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் ஆரம்பகால பணியை தொடங்கிய ஜெயராம், தமிழக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். திறம்பட பணி செய்பவர், அனைவரிடமும் சகஜமாக, எளிமையாக பழகக்கூடியவர் என்று பெயரெடுத்த ஜெயராம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
நடந்தது என்ன? - திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தை சேர்ந்த லட்சுமியின் மூத்த மகன் தனுஷும் (23), தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான வனராஜாவின் மகள் விஜஸ்ரீயும் (21) காதலித்து வந்துள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறி கடந்த ஏப்ரல் 15-ம் தேதி சென்னையில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இதை விரும்பாத வனராஜா, தனது மகளை மீட்க திட்டமிட்டார். காவல் உதவி ஆய்வாளராக இருந்த மகேஸ்வரி மூலமாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தியின் உதவியை நாடியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, வனராஜா, அவரது உறவினர்கள், மகேஸ்வரி ஆகியோர் கடந்த ஜூன் 6-ம் தேதி தனுஷ் வீட்டுக்கு சென்றனர். தம்பதிகள் அங்கு இல்லாததால், தனுஷின் தாயை மிரட்டிவிட்டு, அங்கிருந்த அவரது 17 வயது இளைய மகனை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. போலீஸில் தனுஷின் தாய் இதுகுறித்து புகார் கொடுத்த நிலையில், சிறுவனை கடத்தி சென்றவர்கள் அவனை மறுநாள் அதிகாலை சென்னை மீனம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். சிறுவன் கடத்தலுக்கு ஆயுதப்படை ஏடிஜிபியான எச்.எம்.ஜெயராமின் காவல் வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடத்தல் சம்பவம் தொடர்பாக திருவாலங்காடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொழிலதிபர் வனராஜ், அவரது உறவினர்கள் மணிகண்டன், கணேசன், மகேஸ்வரி, பூந்தமல்லி துத்தம்பாக்கம் வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய 5 பேரை கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். இந்த நிலையில், ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதை விசாரித்த நீதிபதி வேல்முருகன், “உங்களை நம்பி 80 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர். நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் என்றெல்லாம் அவர்களுக்கு தெரியட்டும் என்றுதான் ஆஜராக உத்தரவிட்டேன். ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் சம்பாதிக்கத்தான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்களா. 2 பேர் காதல் திருமணம் செய்ததற்காக வீடு புகுந்து மிரட்டி, சிறுவனை கடத்துவீர்களா?
சட்டம் இயற்றும் இடத்தில் உள்ள நீங்கள் சட்டத்தை மதித்து நடந்திருக்க வேண்டும். மாறாக, 2 ஆயிரம் பேரை நிறுத்தி போலீஸ் விசாரணைக்கு இடையூறு செய்துள்ளீர்கள். எம்.பி., எம்எல்ஏ, போலீஸ் அதிகாரிகள் யாராக இருந்தாலும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது.” என்று காட்டமாக கூறியது குறிப்பிடத்தக்கது.