

சென்னை: ஆள்கடத்தல் வழக்கில் காவல் துறையின் ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசராணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏடிஜிபி ஜெயராமன் கைதானபோது அவர் போலீஸ் சீருடையில் இருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர்களுடன் டிஜிபி சங்கர் ஜிவால் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் காவல் துறை உயர் அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
நடந்தது என்ன? - திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது. காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர்.
இந்நிலையில், பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், கடத்தல் வழக்குக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க உத்தரவிடக் கோரினார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்யப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த தலைமை நீதிபதி, வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரிப்பார் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பி.வேல்முருகன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
பூவை ஜெகன்மூர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார். காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, இந்த சம்பவத்தில் காவல் துறை ஏடிஜிபி ஜெயராமனுக்கு தொடர்புள்ளதாகவும் பணம் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஆனால், நீதிபதி குறிப்பிட்ட நேரத்தில் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜராகவில்லை. அதனால், வழக்கை 45 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்தார். பிற்பகல் 3.30 மணிக்கு நீதிபதி முன்னால் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார். மேலும், இந்த வழக்கில், ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்கும்படியும், தேவைப்பட்டால் பூவை ஜெகன்மூர்த்தியை விசாரித்துக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து ஏடிஜிபி ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளார். காதலித்து பதிவுத் திருமணம் செய்த இளைஞரின் சகோதரர் அவரது காரில்தான் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. | வாசிக்க > பூவை ஜெகன்மூர்த்திக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்; ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய உத்தரவு