இரக்கப்பட்டு தங்கும் அறையில் இடம் கொடுத்தவரிடம் கைவரிசை: கர்நாடக இளைஞர் சென்னையில் கைது

இரக்கப்பட்டு தங்கும் அறையில் இடம் கொடுத்தவரிடம் கைவரிசை: கர்நாடக இளைஞர் சென்னையில் கைது
Updated on
1 min read

சென்னை: உதவி கேட்டவருக்கு இரக்கப்பட்டு தங்கும் அறையில் இடம் கொடுத்தவரிடம் கைவரிசை காட்டி தப்பிய கர்நாடக இளைஞர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நூரில் அமீன் (39). சவுதி அரேபியாவில் வேலை செய்து வந்தார். இவர், வெளிநாட்டு விசாவை புதுப்பிப்பதற்காக கடந்த ஏப்ரல் 3-ம் தேதி சென்னை வந்து, கே.கே.நகர் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினார். இரவு உணவு சாப்பிட்டு விட்டு, தங்கும் விடுதிக்கு நடந்து சென்றபோது, வழியில் அடையாளம் தெரியாத இளைஞர், ‘நூரில் அமீனிடம் தன் பெயர் நஞ்சுண்ட கவுடா என்று கூறி அறிமுகமாகி உடைமைகள் அனைத்தும் தொலைந்து விட்டதாகவும், தங்குவதற்கு இடம் வேண்டும்’ என பரிதாபமாக உதவி கேட்டுள்ளார்.

இரக்கப்பட்ட நூரில் அமீன், நஞ்சுண்ட கவுடாவை, அவரது அறையில் தங்குவதற்கு அனுமதித்தார். இந்நிலையில் நூரில் அமீன், இரவு 11 மணியளவில் கண் விழித்து எழுந்து பார்த்த போது, அவரது 2 செல்போன்கள், ரொக்கம் ரூ.500 மற்றும் சவுதி பணம் ரியால் இந்திய மதிப்பில் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை நஞ்சுண்ட கவுடா திருடிக்கொண்டு தப்பியது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த நூரில் அமீன் இது தொடர்பாக கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், திருடிவிட்டு தப்பிய நஞ்சுண்ட கவுடா (25) கர்நாடகா மாநிலம், தும்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை சென்னை அழைத்து வந்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இவர், இதைபோன்று பலரிடம் கைவரிசை காட்டி உள்ளதாவும், அவர் குறித்து தொடர்ந்து துப்பு துலக்கி வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in