

கடலூர்: கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே பெரியகுமட்டி பகுதியில் நாட்டு வெடி தயார் செய்யும் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுமட்டி பகுதியில் பி.முட்லூர் நாகவல்லி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (55). இவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயார் செய்யும் குடோன் உள்ளது. அரசு உரிமம் பெற்று அவர், நாட்டு வெடி தயார் செய்து, விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று (ஜூன்.15) காலை பி.முட்லூர் நாகவல்லி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிவண்ணன் மனைவி லதா (37) என்பவர் குடோன் அருகே சிறிய அளவிலான கந்தகம் வைத்திருந்த ஓட்டுக் கொட்டகையில் வெடி தயார் செய்யும் பணியில் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடி விபத்தில், கொட்டகை தரை மட்டமானது.
இதில் லதா உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பரங்கிப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று லதாவின் சிதறிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரங்கிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தீயணைத்தனர். வெடி விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.