கோவையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை: கேரளாவில் முகாமிட்டு தனிப்படை விசாரணை

போலீஸார் பறிமுதல் செய்த லாரி
போலீஸார் பறிமுதல் செய்த லாரி
Updated on
1 min read

கோவை: கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப் (55). இவர், திருச்சூரில் உள்ள பாலக்கல் கிராமத்தில் நகைக்கடை மற்றும் பட்டறை வைத்துள்ளார். இவர்,கடந்த 13-ம் தேதி சென்னைக்கு சென்று 1 கிலோ 250 கிராம் தங்கக்கட்டிகளை வாங்கினார். இவற்றின் மதிப்பு ரூ.1.32 கோடியாகும். பின்னர், ஊழியர் விஷ்ணு என்பவருடன் சென்னையில் இருந்து ரயில் மூலமாக நேற்று (ஜூன் 14) காலை கோவை திரும்பியுள்ளார்.

கோவையிலிருந்து ஜெய்சன் ஜேக்கப், விஷ்ணு ஆகியோர் கார் மூலமாக பாலக்காடு சாலை வழியாக கேரளாவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, எட்டிமடை அருகே 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்து உள்ளே ஏறி இருவரையும் தாக்கியும், ஜெய்சனிடம் இருந்த 1.25 கிலோ தங்கக்கட்டியை கொள்ளையடித்தும் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக ஜெய்சன் ஜேக்கப் அளித்த புகாரின் பேரில் க.க.சாவடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 தனிப்படை போலீஸாரும் கேரளாவில் திருச்சூர் உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிசிடிவி காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே, மதுக்கரை அருகேயுள்ள ஒரு ஹோட்டல் முன்பு வைத்து ஜெய்சன் ஜேக்கப் பயணித்த காரை வழிமறித்த லாரியை போலீஸார் நேற்று இரவு பறிமுதல் செய்துள்ளனர். லாரி எதேச்சையாக சாலையில் திரும்பியதாக அல்லது கொள்ளையர்களுக்கு உதவும் வகையில் திட்டமிட்டு திருப்பப்பட்டதா என ஓட்டுநரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மர்ம நபர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் 2 கார்களை கேரளாவில் இருந்து போலீஸார் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். அந்த கார்கள் யாருடையது, யார் பயன்படுத்தினர் என விசாரிக்கின்றனர். மேலும், மர்மநபர்கள் எடுத்துச் சென்ற நகை வியாபாரி ஜெய்சன் ஜேக்கப்பின் காரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in