சென்னை: அடுத்தவர் மனைவியை திருமணம் செய்து வைக்க சொல்லி காவல் நிலையத்தில் இளைஞர் ரகளை

சென்னை: அடுத்தவர் மனைவியை திருமணம் செய்து வைக்க சொல்லி காவல் நிலையத்தில் இளைஞர் ரகளை

Published on

அரும்பாக்கத்தில் அடுத்தவர் மனைவியை திருமணம் செய்து வைக்க சொல்லி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை, அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த 35 வயது பெண் கடந்த 12-ம் தேதி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘எனக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தமிழ்ச்செல்வன் (30) என்பவர் அறிமுகமானார். இருவரும் நட்பாக பழகி வந்தோம். இதை என் கணவர் கண்டித்ததால் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டேன்.

இந்நிலையில், எனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், வீட்டுக்கு வந்த தமிழ்ச்செல்வன், எனக்கு வீட்டில் திருமணத்துக்கு பெண் பார்க்கிறார்கள். ஆனால், எனக்கு நீதான் வேண்டும். என்னை திருமணம் செய்து கொள், என கூறி என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் மறுத்ததால், என்னை அவர் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார் தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, ‘எனக்கு வேறு பெண்ணுடன் திருமணம் வேண்டாம். இந்த பெண்ணை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்,’ என போலீஸாரிடம் கதறி அழுது ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, தமிழ்ச்செல்வனை சிறையில் அடைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in