

கோவை: கோவையில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணிக்க வந்த பெண் பயணியிடம் இருந்து துப்பாக்கி தோட்டாவை பறிமுதல் சிஐஎஸ்எஃப் அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை பீளமேட்டில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து சிங்கப்பூர், ஷார்ஜா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் இடையே விமானங்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ஏராளமான பயணிகள் கோவை விமான நிலையத்துக்கு வந்து செல்கின்றனர்.விமான நிலையத்துக்கு வரும் பயணிகளை மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர் உள்ளிட்டோர் சோதனை செய்த பிறகு உள்ளே அனுமதிக்கின்றனர்.
பயணிகள் கொண்டு வரும் உடமைகள் ஸ்கேனரில் சோதனை செய்த பிறகு அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, இன்று (ஜூன் 14) காலை கோவையில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணிக்க சரளா ராமகிருஷ்ணன் என்ற பெண் பயணி ஒருவர் வந்தார். அவரது உடைமைகளை விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர் வழக்கம் போல் சோதனை செய்தனர். அதில், அந்த பெண் பயணி கொண்டு வந்த பையில் 9 எம்.எம் வகை தோட்டா இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அந்த பெண் பயணியை பிடித்து, பீளமேடு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். துப்பாக்கி தோட்டா எப்படி வந்தது, யாருடையது என அந்த பெண் பயணியிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.