

சென்னை: சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் அதிக அளவு போதைப்பொருள் சென்னைக்கு கடத்தி வரப்படவுள்ளதாக, சென்னை விமான நிலைய சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னைக்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகள் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களையும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பயணி ஒருவர் தாய்லாந்தில் இருந்து இலங்கை வழியாக சென்னை வந்து, சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு செல்ல இருந்தார். அந்த பயணியின் உடைமைகளை சோதனை செய்தபோது, அவர் ரூ.2.8 கோடி மதிப்புள்ள 2.8 கிலோ பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைதுசெய்து விசாரணை நடத்தியதில், இந்த கடத்தலுக்காக, போதைப்பொருள் கடத்தும் கும்பலிடம் ரூ.1.2 லட்சம் பெற்றிருப்பது தெரியவந்தது.
இலங்கை விமானம்: இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில், அடுத்தடுத்து நடந்த சுங்க சோதனைகளில், தாய்லாந்து நாட்டிலிருந்து, சென்னை வழியாக பெங்களூருக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி மதிப்புடைய 10 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு அதை கடத்தும் கும்பலைச் சேர்ந்த 2 பயணிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.