அ​தி​முக நிர்​வாகி கொலை வழக்​கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் - வழக்கின் பின்னணி என்ன?

அ​தி​முக நிர்​வாகி கொலை வழக்​கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் - வழக்கின் பின்னணி என்ன?
Updated on
1 min read

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருமஞ்சன கோபுரம் அருகே கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக நிர்வாகியை வெட்டி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருவண்ணாமலை அதிமுக முன்னாள் நகரச் செயலாளராகவும் கூட்டுறவு வங்கி தலைவராகவும் இருந்தவர் கனகராஜ். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவர், கடந்த 12-02-2017-ல் காலை 7 மணியளவில் நண்பர் கண்ணதாசன் என்பவருடன் நடைபயிற்சிக்காக திருவண்ணாமலை அரசு கல்லூரிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அண்ணாமலையார் கோயிலின் திருமஞ்சன கோபுரம் அருகே சென்றபோது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கனகராஜ் சென்ற வாகனத்தின் மீது மோதினர். இதில், கனகராஜ், கண்ணதாசன் ஆகியோர் நிலைதடுமாறி கீழே விழுந்ததும், மர்ம நபர்கள் 3 பேரும் கனகராஜை சரமாரியாக வெட்டினர். அதை தடுக்க வந்த கண்ணதாசனையும் வெட்டினர். இதில், கையில் வெட்டுக்காயம் ஏற்பட்ட கண்ணதாசன் உயிர் தப்பிய நிலையில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பாக, அப்போதைய திருவண்ணாமலை நகர காவல் ஆய்வாளர் கேசவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், கனகராஜ் கொலை தொடர்பாக பாபு என்ற பங்க் பாபு, ராஜா மற்றும் சரவணகுமார் ஆகியோரை கைது செய்தார். கொலைக்கான காரணம் குறித்து நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை காந்திநகர் பகுதியில் தனக்கு சொந்தமான சிவாஜி காம்ப்ளக்ஸ் கட்டிடத்தை ரூ.3.50 கோடிக்கு பங்க் பாபுவுக்கு விற்பனை செய்ய கனகராஜ் பேசி முடித்துள்ளார். இதற்காக, ரூ.2 கோடி தொகையை பெற்றுக்கொண்ட கனகராஜ் அந்த கட்டிடத்தை பங்க் பாபுவின் பெயருக்கு எழுதி தராததுடன் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த கட்டிடம் தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் வழக்கு முடிந்ததும் எழுதிக் கொடுப்பதாக பங்க் பாபுவிடம், கனகராஜ் கூறி வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட பிரச்சினை இறுதியில் கொலையில் முடிந்தது தெரியவந்தது.

இந்த வழக்கின் விசாரணை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு நடைபெற்ற காலத்தில் ஜாமீனில் வெளியே வந்த் பங்க் பாபுவை கனகராஜியின் ஆதரவாளர்கள் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கும் தனியாக நடந்து வருகிறது. கனகராஜ் கொலையில் தொடர்புடைய மற்ற 2 பேர் மீது தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் நீதிபதி மதுசூதனன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், கனகராஜ் கொலை வழக்கில் ராஜா மற்றும் சரவணகுமார் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in