‘3 முறை மிஸ் ஆன ஸ்கெட்ச்’ - மேகாலயா தேனிலவு கொலையில் சோனம் குறித்து புதிய தகவல்கள்
இந்தூர்: மேகாலயாவுக்கு தேனிலவு கொலை சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சோனம் தனது கணவரை கொல்வதற்கு ஏற்கெனவே மூன்று முறை முயன்றுள்ளார் என்பதும், சோனம் தலைமறைவாக மற்றொரு திட்டம் வகுக்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனத்துக்கும் (25) கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றனர். கடந்த மே 23-ம் தேதி ராஜாவையும் சோனத்தையும் காணவில்லை.
கடந்த ஜூன் 2-ம் தேதி மேகாலயாவின் சிரபுஞ்சியில் உள்ள வெய் சாவ்டாங் அருவி அருகே உள்ள பள்ளத்தக்கில் ராஜா ரகுவன்சியின் உடல் மீட்கப்பட்டது.
மேகாலயா போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி சோனம், காதலர் ராஜ் குஷ்வாகா (21) மற்றும் ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கைதானவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் காவல் துறையினர் கூறிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் விவரம்:
மேகாலயா சம்பவத்துக்கு முன்பே சோனம் 3 முறை ராஜா ரகுவன்சியை கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. முதலில் குவஹாத்தியில் வைத்து ராஜா ரகுவன்சியை கூலிப்படையை வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். ஆனால், சில காரணங்களால் அது நடக்காமல் போனது.
அடுத்ததாக மேகாலயாவின் சோஹ்ராவில் வைத்து இரண்டு முறை கணவரை கொலை செய்ய சோனா முயற்சித்துள்ளார். அதுவும் நிறைவேறவில்லை. இறுதியாக 4-வது முயற்சியில் வெய்சாடோங் அருவியில் வைத்து தனது கணவரை கொல்லும் திட்டத்தை சோனா வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.
கணவரை கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவே ரகுவன்சியை சோனா பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். முதல் மூன்று முறை உடலை அப்புறப்படுத்த இடம் கிடைக்கவில்லை என்பதால் கணவரை கொல்லும் திட்டத்தை காதலன் ராஜ் குஷ்வாகவுடன் சேர்ந்து சோனா ஒத்திப்போட்டுள்ளார். இறுதியில் வெய்சாடோங்கில் சூழ்நிலை சாதகமாக இருந்ததை பயன்படுத்தி அவர்கள் கொலைத் திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். இதற்கு மூளையாக ராஜ் குஷ்வாகா செயல்பட்டுள்ளார்.
அதேபோன்று இந்த கொலைத் திட்டத்தில் திடுக்கிடும் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், ரகுவன்சியின் மனைவி சோனம் என்று அடையாளம் காட்டுவதற்காக ஒரு பெண்ணை கொன்று அவரது உடலை எரிக்க கொலையாளிகள் திட்டமிட்டிருந்தனர். இதன் மூலம், சோனம் தலைமறைவாக இருக்க அதிக நேரம் கிடைக்கும் என்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது என்று காவல் துறையினர் விவரித்துள்ளனர்.
