

தென்காசி: சுந்தரபாண்டியபுரம் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் கீழபாட்டாகுறிச்சி பகுதியில் அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட முதியோர் மற்றும் ஆதரவற்றோர் தங்கியுள்ளனர்.
இவர்களுக்கு நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல உணவு வழங்கப்பட்டது. சிறிது நேரத்தில் பலருக்கும் உணவு ஒத்துக்கொள்ளாமல் வாந்தி ஏற்பட்டுள்ளது. சிலர் மயங்கி விழுந்தனர். இதையடுத்து, அதிக பாதிப்புக்கு உள்ளான 11 பேரை தென்காசியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி செங்கோட்டையை சேர்ந்த சங்கர் கணேஷ் (48), அம்பிகா (40), சொக்கம்பட்டி முருகம்மாள் (45) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், ஆபத்தான நிலையில் உள்ள இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேபோல, 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தென்காசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அன்னை முதியோர் இல்லத்தில் மாவட்ட வருவாய், மருத்துவத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, காப்பக நிர்வாகிகளை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.