

கரூர்: நிலத்தகராறில் தங்கையை அரிவாளால் வெட்டிய பாஜக முன்னாள் நிர்வாகிகள் 2 பேர் மீது கரூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான அண்ணனை தேடி வருகின்றனர்.
கரூர் செங்குந்தபுரம் 5-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (47). பாஜக முன்னாள் மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் மாவட்ட பொது செயலாளர் பொறுப்பு வகித்தவர். இவர் தங்கை சுமிதா (44). இவர் கணவர் சரவணன். இவர்கள் கரூர் தெற்கு காந்திகிராமம் இந்திரா நகரில் வசித்து வருகின்றனர். கோபிநாத்தும், சரவணனும் சேர்ந்து கரூர் செம்மடை பகுதியில் 50 சென்ட் நிலம் வாங்கியுள்ளனர்.
இதனை விற்பனை செய்த நிலையில், சரவணனுக்கான பங்கு தொகையை கோபிநாத் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவரிடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜூன் 9-ம் தேதி இரவு 8 மணிக்கு செங்குந்தபுரத்தில் உள்ள கோபிநாத் அலுவலகத்திற்கு சுமிதா சென்று பங்கு தொகையை கேட்டுள்ளார். அப்போது இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த பாஜக கரூர் மத்திய மாநகர முன்னாள் தலைவர் கார்த்திகேயன் (44) கோபிநாத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
தங்கை மீது ஆத்திரமடைந்த கோபிநாத் சுமிதாவை ஆபாசமாக திட்டி, கையில் வைத்திருந்த அரிவாளால் அவரது கை, நெஞ்சு பகுதியில் வெட்டி, அவரை கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த சுமிதா கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கரூர் நகர போலீஸில் சுமிதா புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் கோபிநாத், கார்த்திகேயன் ஆகிய இருவர் மீது ஆபாசமாக திட்டி, ஆயுதத்தால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தது, பெண் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாஜக முன்னாள் கரூர் மத்திய மாநகர தலைவர் கார்த்திகேயனை கரூர் நகர போலீஸார் நேற்றிரவு கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் நேற்றிரவு அடைத்தனர். தலைமறைவான கோபிநாத்தை தேடி வருகின்றனர்.