கூலிப்படையால் கொல்ல முடியாவிட்டால் ‘பிளான் பி’ இதுதான்... - சோனம் வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்கள்

கூலிப்படையால் கொல்ல முடியாவிட்டால் ‘பிளான் பி’ இதுதான்... - சோனம் வாக்குமூலத்தில் அதிர்ச்சி தகவல்கள்
Updated on
2 min read

சோரா: இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்சி கொலை வழக்கில் ஒரு முக்கிய திருப்பமாக, ராஜாவை கொன்றதை அவரது மனைவி சோனம் ரகுவன்சி ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைதாகியுள்ள சோனத்தின் காதலர் ராஜ் குஷ்வாகாவிடம் நடந்த குறுக்கு விசாரணையின்போது சோனம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக மேகாலயா போலீஸார் தெரிவித்தனர்.

காவல் துறையினரின் விசாரணையில் வெளியான தகவல்களின்படி, சோனம் தனது காதலர் ராஜ் குஷ்வாகாவுக்கு ரூ.50,000 கொடுத்து, விஷால் சிங், ஆனந்த் குர்மி மற்றும் ஆகாஷ் ராஜ்புத் ஆகிய 3 பேருக்கும் ஷில்லாங்குக்கு பயண ஏற்பாடு செய்தார். மேலும், தேனிலவு பயணத்தின்போது தன்னையும் ராஜாவின் நடமாட்டத்தையும் கண்காணிக்கும்படி அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

திருமணத்துக்குப் பிறகும் சோனம், ராஜுடன் தொடர்பில் இருந்துள்ளார். மே 16 அன்று, இந்தூரில் உள்ள ஓர் உணவகத்தில் ராஜ் தனது உறவினர் விஷால் சவுகான் மற்றும் அவரது நண்பர்கள் ஆகாஷ் ராஜ்புத் மற்றும் ஆனந்த் குர்மி ஆகியோருடன் கொலைத் திட்டம் குறித்து விவாதித்ததாக இந்தூர் காவல் துறை தெரிவித்துள்ளது. சவுகான், ராஜ்புத் மற்றும் குர்மி ஆகியோர் மே 17 அன்று ராஜ் ரூ 50 ஆயிரத்தை வழங்கிய பின்னர் மொபைல் போனுடன் மேகாலயாவுக்குச் சென்றனர். அதே நேரத்தில் ராஜ் குஷ்வாகா இந்தூரில் தங்கி சோனமின் சகோதரரின் தொழிற்சாலையில் தொடர்ந்து பணியாற்றினார்

இதனையடுத்து குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் மே 17 முதல் 18 வரை இந்தூரிலிருந்து டெல்லிக்கு ரயிலில் சென்று பின்னர், கவுஹாத்திக்கு ராஜதானி எக்ஸ்பிரஸில் ஏறினார்கள். ராஜாவும் சோனமும் மே 20 அன்று இந்தூரிலிருந்து ஷில்லாங்குக்கு விமானத்தில் சென்றனர். பயணத்தின்போது ராஜுடன் தொடர்பில் இருக்க சோனம் வெவ்வேறு மொபைல் செயலிகளைப் பயன்படுத்தியுள்ளார். இதன்மூலம் அவர் தனது நேரடி இருப்பிடத்தை அவ்வப்போது பகிர்ந்து கொண்டார். இதன்மூலமாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் சோனத்தையும், ராஜாவையும் பின்தொடர்ந்துள்ளனர்.

கொலை நடந்தபோது ராஜா ரகுவன்சியின் மனைவி சோனம் ரகுவன்சி சம்பவ இடத்தில் இருந்ததாகவும், அவர் தனது கணவர் இறப்பதைப் பார்த்ததாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், ராஜா ரகுவன்சியைக் கொல்ல சோனம் மிகவும் உறுதியாக இருந்ததாகவும், கூலிப்படையினர் தோல்வியுற்றால் அவரை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொல்ல திட்டமிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 23 அன்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் சக சுற்றுலாப் பயணிகள் போல நடித்து ராஜா மற்றும் சோனத்துடன் சேர்ந்து மலையேற்றத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சுற்றுலாப் பயணிகள் அதிகம் இருக்கும் டபுள் டெக்கர் லிவிங் ரூட் பாலத்திலிருந்து விலகி, மிகவும் தொலைதூர, கரடுமுரடான பாதையைத் தேர்ந்தெடுத்து சென்றுள்ளனர். ராஜா மே 23 அல்லது 24 அன்று கொல்லப்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

காவல் துறையினரின் தகவல்களின்படி, மலையேற்றத்தின் போது சோனம் வேண்டுமென்றே பின்தங்கி வந்ததாகவும், "அவரைக் கொல்லுங்கள்" என்று கூச்சலிட்டு சிக்னல் கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது. அப்போதுதான் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரில் ஒருவர், ராஜாவை கூர்மையான ஆயுதத்தால் தாக்கியுள்ளார். மற்றவர்கள் சேர்ந்து, அவரது தலை மற்றும் உடற்பகுதியில் தாக்கினர். அதன்பின்னர் ராஜாவின் உடல் இழுத்துச் செல்லப்பட்டு, ஒரு பள்ளத்தாக்கில் தள்ளிவிடப்பட்டது. கொலைக்கான ஆதாரங்களை அப்புறப்படுத்த சோனம் உதவியுள்ளார்.

உடனடியாக சோனம் சம்பவ இடத்தை விட்டு வெளியேறி, ஷில்லாங்குக்கு ஒரு டாக்ஸியில் சென்றார். பிறகு கவுஹாத்தி வழியாக இந்தூருக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் 3 பேரும் பிரிந்து கவுஹாத்தி வழியாக தப்பித்து, மத்தியப் பிரதேசத்துக்கு திரும்பினர். மத்தியப் பிரதேச காவல் துறையின் கூற்றுப்படி, தனது கணவரின் கொலைக்குப் பிறகு சோனம் இந்தூருக்குத் திரும்பினார். அவர் ஒரு வாடகை அறையில் ராஜ் குஷ்வாகாவைச் சந்தித்துள்ளார் எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், கொலை செய்தது எப்படி என்பதை போலீஸார் முன் கூலிப்படையினர் நடித்துக் காட்டவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை போலீஸார் செய்துள்ளனர். சோனம் உள்ளிட்டோரை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று நடித்துக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆபரேஷன் ஹனிமூன் பின்புலம்: மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜா ரகுவன்சி (28). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சோனத்துக்கும் (25) கடந்த மே 11-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தேனிலவை கொண்டாட மேகாலயா சென்றனர். கடந்த மே 23-ம் தேதி ராஜாவையும் சோனத்தையும் காணவில்லை. கடந்த ஜூன் 2-ம் தேதி மேகாலயாவின் சிரபுஞ்சியில் உள்ள வெய் சாவ்டாங் அருவி அருகே உள்ள பள்ளத்தக்கில் ராஜா ரகுவன்சியின் உடல் மீட்கப்பட்டது. மேகாலயா போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜா ரகுவன்சி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி சோனம், காதலர் ராஜ் குஷ்வாகா (21) மற்றும் ஆகாஷ் (19), விஷால் (22), ஆனந்த் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

தேனிலவுக்கு வந்த புதுமண தம்பதி காணாமல் போனதால் மேகாலயாவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த பலரும் பயணத்தை ரத்து செய்தனர். இதனால் மேகாலயாவின் சுற்றுலா துறை முடங்கியது. இதையடுத்தே ‘ஆபரேஷன் ஹனிமூன்’ என்ற பெயரில் மேகாலயா காவல் துறை விசாரணையை தொடங்கியது. 120 போலீஸார் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதில் 20 பேர் மூத்த அதிகாரிகள் ஆவர். தனிப்படைகளைச் சேர்ந்தவர்கள் மேகாலயா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர விசாரணை நடத்தினர். சோனத்தின் செல்போன் அழைப்புகள், சமூக வலைதள பதிவுகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் புலன் விசாரணை மூலம் உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது என்று தனிப்படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in