

திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார் குப்பம் பகுதியில் காங்கிரஸ் பிரமுகர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே. பேட்டை அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். நெசவு தொழிலாளியான இவர், அம்மையார்குப்பம் பகுதி காங்கிரஸ் கமிட்டியின் பிரதிநிதியாக இருந்து வருகிறார். நேற்று இரவு ராஜேந்திரனின் மனைவி சிவகாமி, மகன்கள் கணபதி, பார்த்திபன், ராஜசேகர் ஆகியோர் வீட்டில் அனைவரும் உறங்கிய நிலையில், வீட்டில் உள்ள விசைத்தறி மூலம் நெசவு வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை வீட்டின் பின்புற பகுதியில் ராஜேந்திரன் தலையில் பலத்த காயங்களுடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஆர்.கே. பேட்டை போலீஸார், சம்பவ இடம் விரைந்து ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, திருவள்ளூர் எஸ்பி சீனிவாசபெருமாள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொலை தொடர்பாக ஆர்.கே.பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளி யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.