

சென்னை: புதிதாக தொழில் தொடங்க வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக பெண்ணிடம் ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார். சென்னை மேற்கு மாம்பலம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரியங்கா (40). இவருக்கு கடந்தாண்டு கொளத்தூரைச் சேர்ந்த ரவிக்குமார் (48) என்பவரது அறிமுகம் கிடைத்தது.
புதிதாக தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற ஆசை பிரியங்காவிடம் இருந்தது. இதை ரவிக்குமாரிடம் வெளிப்படுத்தியுள்ளார். இதைக் கேட்ட ரவிக்குமார் தேவையான உதவிகளை செய்வதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், வங்கி மூலம் மிகக் குறைந்த வட்டியில் ரூ.80 லட்சம் கடன் பெற்றுத் தருவதாகவும், அதற்கு முன்பணமாக ரூ.27 லட்சம் தர வேண்டும் என்றும், கடனை திரும்பச் செலுத்தும்போது இந்த ரூ.27 லட்சத்தை கழித்துக் கொண்டு மீதம் உள்ள தொகையை செலுத்தினால் போதும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதை உண்மை என நம்பிய பிரியங்கா பல தவணைகளாக ரூ.27 லட்சத்தை ரவிக்குமாரிடம் கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி அவர் கடன் பெற்றுக் கொடுக்கவில்லை. ரூ.27 லட்சம் முன் பணத்தையும் கொடுக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த பிரியங்கா இது தொடர்பாக திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், தொழில் தொடங்க கடன் பெற்றுத் தருவதாக ரூ.27 லட்சம் பெற்று மோசடி செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ரவிக்குமார் கைது செய்யப்பட்டார். தொடர்ந்த விசாரணை நடைபெற்று வருகிறது.