விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் துபாயில் இருந்து கொண்டே மனைவியை கொல்ல கணவர் சதி

வினோத், மெஹ்​ரான் ஆதில்
வினோத், மெஹ்​ரான் ஆதில்
Updated on
1 min read

சென்னை: விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், துபாயில் இருந்தவாறு சூளைமேட்டில் வசிக்கும் மனைவியை தீர்த்துக் கட்ட கூலிப்படையை ஏவிய கணவரை போலீஸார் தேடி வருகின்றனர். கூலிப்படையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சூளைமேட்டில் வசிப்பவர் பெனாசிர் பேகம் (33). இவர் கடந்த 2-ம் தேதி இரவு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இரும்புக் கம்பியால் பெனாசிர் பேகம் தலையில் தாக்கிவிட்டுத் தப்பினர். பலத்த காயம் அடைந்த அவரை, அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொலை முயற்சி தொடர்பாக சூளைமேடு போலீஸார் வழக்குப் பதிந்து சம்பவ இடம், அதைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில், பெனாசிர் பேகத்தை கொலை செய்ய முயன்றதாக தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வினோத் (24), அதே பகுதியைச் சேர்ந்த மெஹ்ரான் ஆதில் (24) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவரே மனைவியை கொல்ல கூலிப்படையை ஏவியது தெரியவந்தது.

விசாரணையில், ``தாக்குதலுக்கு உள்ளான பெனாசிர் பேகத்தின் கணவர் ஜாகீர் உசேன் தற்போது துபாயில் வேலை செய்து வருகிறார். தம்பதிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இருவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு சென்னையில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்தான், ஜாகீர் உசேன் கூலிப்படைக்கு ரூ.1 லட்சம் பேரம் பேசி முதல் கட்டாக ரூ.40 ஆயிரம் கொடுத்து மனைவியை கொல்ல கூலிப்படையை ஏவியுள்ளார்'' எனத் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கூலிப்படையை ஏவிய ஜாகீர் உசேன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட கூலிப்படையைச் சேர்ந்த இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே பெனாசிர் பேகத்தின் தந்தையும் இதே பாணியில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டிருந்தார். இதிலும் ஜாகிர் உசேனின் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in