Published : 10 Jun 2025 08:20 PM
Last Updated : 10 Jun 2025 08:20 PM
கோவை: கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள நீலிக்கோணாம்பாளையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், வீட்டின் முதல் தளத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த துணிகள் எரிந்து நாசமாகின. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை சிங்காநல்லூர் அருகேயுள்ள நீலிக்கோணாம்பாளையம் பிரதான பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள வீதியைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். மாணிக்கராஜ் பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். தவிர, பனியன் உள்ளிட்ட துணிகளை வாங்கி வீட்டில் வைத்து வியாபாரமும் செய்து வருகிறார்.
இவர் வசிக்கும் வீடு தரைத்தளம் மற்றும் 2 தளங்களைக் கொண்டதாகும். தரைத்தளத்தில் மாணிக்கராஜ் குடும்பத்துடன் வசித்துக் கொண்டு, முதல் தளத்தில் துணிகளை அடுக்கி வைத்து வியாபாரம் செய்து வந்தார். இன்று (ஜூன் 10) மாணிக்கராஜ் மற்றும் குடும்பத்தினர் வெளியே சென்றிருந்தனர். இந்நிலையில், மதியம் அவரது வீட்டின் முதல் தளத்தில் இருந்து தீப்பிடித்து கரும்புகை வெளியே வந்தது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் பீளமேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர்கள் முத்துக்குமரன், முருகேசன் ஆகியோர் தலைமையில் பீளமேடு தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது. தீயணைப்பு வீரர்கள் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, அங்கு வைக்கப்பட்டிருந்த சமையல் எரிவாயு சிலிண்டர், வெப்பத்தின் காரணமாக வெடித்து சிதறியது. இதனால் வீட்டின் முன்பு நின்றிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர்.
தொடர்ந்து சில மணி நேர போராட்டத்துக்குப் பின் தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் வீட்டின் முதல் தளத்தில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தரைத்தளத்தில் இருந்த சில பொருட்களும் சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT