Published : 10 Jun 2025 07:28 PM
Last Updated : 10 Jun 2025 07:28 PM
நாமக்கல்: பரமத்தி அருகே மூதாட்டி கொலை வழக்கில், அவரது தோட்டத்தில் பணிபுரிந்த முன்னாள் பணியாளர் உட்பட 2 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கொளத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் (67). இவரது கணவர் ராசப்பன் சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டார். மகன், மகளுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால், தனது தோட்டது வீட்டில் சாமியாத்தாள் மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 7-ம் தேதி நள்ளிரவு சாமியாத்தாளின் வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி தலைமறைவாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாமியாத்தாள் 8-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக நல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் உத்தரவின் பேரில், காவல் துணைக் காண்காணிப்பாளர் சங்கீதா தலைமையில் 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். மேலும், சாமியாத்தாளின் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் விசாரணை நடத்தியதோடு, சாமியாத்தாளுக்கு வந்த செல்போன் அழைப்புகள், வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி மேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில், சாமியாத்தாளின் தோட்டத்தில் பணிபுரிந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் பணியாளர் ஆனந்தராஜ் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, கரூர் மாவட்டம் குளித்தலையிலிருந்த அவரை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சாமியாத்தாள் மகள் நடத்தி வந்த ஆயில் மில்லில் பணிபுரிந்த என்னை சரியாக பணிபுரியவில்லை எனக்கூறி பணியிலிருந்து நிறுத்தி விட்டனர்.
அதன் பின்னர் அவ்வப்போது சாமியாத்தாளின் விவசாயத் தோட்டத்தில் பணிபுரிந்து வந்தேன். கடந்த தீபாவளியின்போது, மீண்டும் தாயும், மகளும் சேர்ந்து என்னைத் திட்டி, பணியிலிருந்து நிறுத்தி விட்டனர். இந்த ஆத்திரத்தில் சாமியாத்தாளை கொலை செய்தேன். இதற்கு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் உடந்தையாக இருந்தார்’ என ஆனந்தராஜ் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆனந்தராஜ் மற்றும் அஜித்குமாரைத் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்திய அரிவாள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT