Published : 10 Jun 2025 03:29 PM
Last Updated : 10 Jun 2025 03:29 PM
இந்தூர்: இந்தூர் தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 வயது நபரை, ஏழு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மேகாலயா காவல் துறைக்கு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆனந்த் குர்மியை (23) இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் மேகாலயா காவல் துறை ஆஜர்படுத்தியதாக இந்தூரின் கூடுதல் காவல் ஆணையர் ராஜேஷ் தண்டோடியா தெரிவித்தார். மேகாலயா காவல் துறையின் வேண்டுகோளின் பேரில் ஜூன் 16 வரை குர்மியை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. திங்கள்கிழமை மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட குர்மி இந்தூருக்கு அழைத்து வரப்பட்டார்.
ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற மூவரான ராஜ் குஷ்வாஹா, விஷால் சவுகான் மற்றும் ஆகாஷ் ராஜ்புத் ஆகியோரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மேகாலயா காவல் துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து, மேகாலயா காவல் துறை இந்த நான்கு பேரையும் போக்குவரத்து காவலின் அடிப்படையில் தங்களுடன் அழைத்துச் செல்லும் என்று ராஜேஷ் தண்டோடியா கூறினார். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் 20 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் தொடர்பான முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் உள்ளூர் காவல் நிலையங்களில் இல்லை என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, கணவர் ராஜா ரகுவன்ஷியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மனைவி சோனம் (25), உத்தரப் பிரதேசத்தின் காஜிப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்த்கஞ்ச் காவல் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
பின்னணி என்ன? - மேகாலயாவில் தேனிலவின்போது தனது கணவர் ராஜா ரகுவன்ஷியை கொல்ல மனைவி சோனம் கொலையாளிகளை வேலைக்கு அமர்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. போலீஸார் விசாரணையில், சோனம் ரகுவன்ஷி, தற்போது கைதாகியுள்ள ராஜ் குஷ்வாஹாவை காதலித்ததாகக் கூறப்படுகிறது. சோனமின் தாய் வீடு இந்தூரின் கோவிந்த் நகர் கார்ச்சா பகுதியில் உள்ளது. மரச்சாமான்களில் பயன்படுத்தப்படும் சன்மிகா தாள்களை விற்பனை செய்யும் குடும்பத் தொழிலை அவர்கள் செய்கின்றனர். 12-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த குஷ்வாஹா, அந்த நிறுவனத்தில் கணக்காளராகப் பணிபுரிந்துள்ளார்.
இந்த நிலையில், மே 11-ஆம் தேதி இந்தூரில் போக்குவரத்து தொழில் செய்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷியுடன், சோனமுக்கு திருமணம் நடைபெற்றது. மே 20-ஆம் தேதி இத்தம்பதியினர் தேனிலவுக்காக மேகாலயா சென்றனர். தேனிலவுக்காக மேகாலயா சென்றிருந்த ராஜா ரகுவன்ஷி மற்றும் அவரது மனைவி சோனம் ஆகியோர் மே 23 அன்று காணாமல் போயினர்.
இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில், ஜூன் 2-ஆம் தேதி கிழக்கு காசி மலை மாவட்டத்தின் சோரா(சிரபுஞ்சி) பகுதியில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள ஆழமான பள்ளத்தில் ரகுவன்ஷியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சோனம் மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். | விரிவாக வாசிக்க > மேகாலயாவில் தேனிலவு சென்ற இடத்தில் கணவன் கொலை: காதலனுடன் வாழ ஆசைப்பட்டு கூலிப்படை வைத்து கொன்ற மனைவி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT