

கோவை அருகே கள்ள நோட்டுகளுக்கிடையில் வெள்ளை தாள்களை கொடுத்து மோசடி செய்ய முயன்ற கும்பலைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். தப்பிய நால்வரை தேடி வருகின்றனர்.
கோவை கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். கூலித் தொழிலாளியான இவரை, கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் தன்னிடம் ரூ.50 ஆயிரம் கொடுத்தால், ரூ.2 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை தருவதாகவும், அசல் நோட்டுகள் போல உள்ள அவற்றை எளிதாக மாற்றிக் கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.
அதன்படி, கருமத்தம்பட்டியில் கடந்த 7-ம் தேதி இரவு முத்துக்குமார் அக்கும்பலைச் சேர்ந்தவர்களை சந்தித்தார். அவர்கள் ரூபாயை நோட்டு கட்டை முத்துக்குமாரிடம் கொடுத்தனர். அதில், முதல் தாளும், கடைசி தாளும் ரூபாய் நோட்டுகள் போல் இருந்தன. இடைப்பட்ட தாள்கள் வெள்ளை தாள்களாக இருந்தன. அதே சமயம் முத்துக்குமாரும் ரூ.50 ஆயிரம் எடுத்துச் செல்லவில்லை. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.
முத்துக்குமார் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே கும்பல் அங்கிருந்து தப்ப முயன்றது. கருமத்தம்பட்டி நால்ரோடு அருகே ரோந்து பணியில் இருந்த கருமத்தம்பட்டி போலீஸார் தகவல் கிடைத்த இடத்துக்கு வந்து கும்பலை பிடிக்க முயன்றனர். நால்வர் தப்பிவிட ஒருவர் பிடிபட்டார். விசாரணையில் அவர் தருமபுரியைச் சேர்ந்த இளவரசன் (30) என்பதும், தப்பியவர்கள் சூலூர் மாதப்பூர் அருகேயுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் எனவும் தெரியவந்தது.
இளவரசனிடம் இருந்து 18 பண்டல்களை போலீஸார் கைப்பற்றினர். இதில், 13 பண்டல்களில் முதல் மற்றும் கடைசி தாள்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஸ்கேன் செய்து பிரிண்ட் எடுத்து வைக்கப்பட்டிருந்தன. மீதமுள்ள 5 பண்டல்களில் 500 ரூபாய் நோட்டுகள் பிரிண்ட் எடுத்து வைக்கப் பட்டிருந்தன. இடையில் அனைத்தும் வெள்ளைத் தாள்களாக இருந்தன. இதையடுத்து இளவரசனை நேற்று முன்தினம் இரவு போலீஸார் கைது செய்தனர். தப்பிய நால்வரையும் தேடி வருகின்றனர்.