

பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த சிவாச்சாரியாரை காவல் துறையினர் நேற்று புதுச்சேரியில் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயிலில் உழவார பணிக்கு வந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி திருமணம் செய்வதாக ஏமாற்றி, அவரை மிரட்டிய சிவாச்சாரியார் தியாகராஜன் (45) மீது பாதிக்கப்பட்ட பெண் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் சிவாச்சாரியார் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ய முயன்ற போது, அவர் தலைமறைவானது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து,கோயிலில் நிரந்தர பணியாளராக இருப்பதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்பதற்கான விளக்கத்தை 3 நாட்களுக்கு நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க வேண்டுமென சிவாச்சாரியாருக்கு கோயில் செயல் அலுவலர் சிவசங்கரி நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
அவரை பணி நீக்கம் செய்யாமல், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஆம்பூர் பகுதி பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. கோயில் சிவாச்சாரியாரின் செயலால் கோயில் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
அவர் பணியில் தொடர்ந்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். அதனால், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஆம்பூர் ஆன்மீக பேரவை, விஜய பாரத மக்கள் கட்சி ஆகியவை சார்பாக அதன் பிரதிநிதிகள், நிர்வாகிகள், கோயில் செயல் அலுவலரை சந்தித்து மனு அளித்தனர்.
இந்நிலையில் தலைமறைவான தியாகராஜனை காவல் துறையினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். கடைசியாக அவர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் புதுச்சேரி சென்று அங்கு பதுங்கியிருந்த தியாகராஜனை நேற்று கைது செய்து, ஆம்பூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.