

சென்னை: கந்துவட்டி கேட்டு முதியவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் ரவுடி கைது செய்யப்பட்டார். சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்தவர் ஷாஜகான் (70). இவர் அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்பவரிடம் கடந்தாண்டு ரூ.40 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அந்த கடனுக்கான வட்டியாக வாரந்தோறும் ரூ.8 ஆயிரம் கொடுத்துள்ளார். ஷாஜஹான், முதலையும், வட்டியையும் ஒரே நேரத்தில் கொடுத்து கடனை அடைக்க முயன்றுள்ளார்.
ஆனால், புஷ்பா தரப்பு அந்த பணத்தை வாங்காமல், வாரந்தோறும் ரூ.8 ஆயிரம் கந்துவட்டி கேட்டு மிரட்டி வந்தனராம். இந்நிலையில் கடந்த இரு மாதங்களாக ஷாஜஹான், வட்டியை கொடுக்க முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில் ஷாஜஹானிடம் வட்டியை கேட்டு புஷ்பாவின் மகன் ராகுல் நேற்று முன்தினம் தகராறு செய்ததோடு தாக்கவும் செய்துள்ளார்.
இதில், தலைப் பகுதியில் பலத்தக் காயமடைந்த ஷாஜஹான், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து பேசின்பாலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராகுலை நேற்று கைது செய்தனர். இவர் காவல்துறையின் ரவுடிகள் பட்டியலில் ‘சி’ பிரிவில் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.