Published : 09 Jun 2025 04:11 PM
Last Updated : 09 Jun 2025 04:11 PM
கடலூர்: சிதம்பரம் அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள சி.கொத்தங்குடி முத்தையா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் ராமநாதன் (40). இவர் நெய்வேலி என்எல்சி ஊழியர். இந்நிலையில், இன்று (ஜூன் 9) காலை ராமநாதன் அவரது பைக்கில் சிதம்பரத்திலிருந்து புவனகிரி செல்லும் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்தில் அச்சகம் வைத்துள்ள வயலூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அருள்பிரகாசம் மகன் சுந்தரேசன் (47) என்பவர் அவரது பைக்கில் எதிரே வந்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக 2 பைக்குகளும் மோதியது.
இந்த விபத்தில் 2 பேரும் கீழே விழுந்தனர். பலத்தகாயம் அடைந்த ராமநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுந்தரேசனை அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT