

தாம்பரம்: தாம்பரம் சானிடோரியம் பகுதியில் உள்ள அரசு சேவை இல்லத்தில் தங்கிப் படித்த 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அரசு சேவை மைய காவலாளியை போலீஸார் கைது செய்தனர்.
தாம்பரம் சானிடோரியம் பகுதியில் தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பாக அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த 4 நாட்களுக்கு முன்பு அரசு சேவை இல்லத்தில் சேர்ந்து குரோம்பேட்டையில் உள்ள அரசு மகளிர் பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சேவை இல்லத்தில் இருந்து எழுந்து வரும்போது மர்ம நபர் மாணவி முகத்தில் கைவைத்து அழுத்தி மயக்கம் அடைய செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதில் முகம் மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதோடு கால் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த மாணவி வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டதால் அங்கிருந்து மர்ம நபர் தப்பிச் சென்றுள்ளார். அப்போது, அருகில் இருந்த மாணவிகள் மற்றும் பாதுகாவலர்கள் அவரை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு எட்டாம் வகுப்பு மாணவி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் அரசு சேவை இல்லத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சேவை இல்லத்தில் புகுந்து மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து சிட்லபாக்கம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிட்லபாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த அரசு சேவை மைய காவலாளி மேத்யூ (49) என்பவர்தான் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்தனர்.