

சென்னை: இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மருத்துவர் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை கொடுங்கையூர் பகுதியில் வசித்து வந்த நித்யஶ்ரீ (26) என்ற இளம் பெண் கடந்த 5-ம் தேதி அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீஸார் நித்யஸ்ரீ உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்டமாக இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதியப்பட்டது. போலீஸாரின் விசாரணையில் நித்யஸ்ரீயை கொலை செய்து, அவர் தற்கொலை செய்ததுபோல் நாடகமாடியது சைதாப்பேட்டையில் வசித்து வந்த, மருத்துவர் சந்தோஷ்குமார் (27) என்பது தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சந்தோஷ்குமாருக்கும், இறந்துபோன நித்யஶ்ரீக்கும் ஏற்கெனவே கூடா நட்பு இருந்து வந்த நிலையில், கடந்த 4-ம் தேதி இரவு, சந்தோஷ்குமார், நித்யஶ்ரீயின் வீட்டுக்கு சென்று அவருக்கு மது கொடுத்து, அவர் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தபோது, மசாஜ் செய்வதுபோல தலையணையில் அவரது முகத்தை வைத்து அழுத்தி கொலை செய்ததும், கொலை என்று தெரியாமல் அது தற்கொலைபோல் இருக்க வேண்டும் என்பதற்காக நித்யஶ்ரீ பயன்படுத்தும் மாத்திரைகளை சடலம் அருகே வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டது போன்று சித்தரித்ததோடு, அவரது வீட்டிலிருந்த தங்க நகைகளை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
முன்னதாக கொலைக்கான காரணம் குறித்து சந்தோஷ்குமார் போலீஸாரிடம் கூறுகையில், ``நித்யஸ்ரீயுடன் நான் படுக்கை அறையில் நெருக்கமாக இருந்ததை எனக்குத் தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டி பல லட்சத்தை பறித்து விட்டார். அவர் என்னைத் தவிர மேலும் பலருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதுதவிர, அவர் என்னை தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்தார்.
ஒரு கட்டத்தில் அவற்றை எனது பெற்றோருக்கு அனுப்பி வைத்துவிடுவேன் என மிரட்டி பணம் பறிக்க முயன்றதால் ஆத்திரம் ஏற்பட்டது. எனவே, அவரை தீர்த்துக் கட்டும் நோக்கத்தில் ஆசை வார்த்தை கூறி அவரது வீட்டுக்கே சென்று நெருக்கமாக இருந்துவிட்டு பின்னர் தீர்த்துக் கட்டினேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறம் இருக்க கைது செய்யப்பட்ட மருத்துவர் சந்தோஷ் குமார் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, நித்யஸ்ரீயுடன் தொடர்பில் இருந்த பலரும் காவல் துறையினரின் சந்தேக வளையத்துக்குள் உள்ளனர்.