

சென்னை: மின்வாரிய ஊழியர்போல நடித்து, ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டுக்குள் புகுந்து 8 பவுன் நகைகளைத் திருடிய பிரபல கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.
புழல் கதிர்வேடு பகுதியில் வசிப்பவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை திரிபுரசுந்தரி (69). கடந்த 30ம் தேதி அதிகாலை இவரது கணவர் யோகா வகுப்புக்கு சென்றிருந்தார். திரிபுரசுந்தரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் டிப்டாப் உடை அணிந்த ஆசாமி ஒருவர் வந்தார். வந்தவர் மூதாட்டியிடம், தான் மின்வாரிய ஊழியர் என்றும், இப்பகுதியில் மின்கசிவு பிரச்சினை உள்ளதாக புகார் வந்ததால் சோதனை செய்ய வந்திருப்பதாகவும், உங்களது வீட்டில் மின் இணைப்பை சரி பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.
தொடர்ந்து முதல்மாடியில் உள்ள மின்பெட்டியை சரி பார்ப்பது போல நடித்து மூதாட்டியை கீழே தரைதளத்தில் உள்ள மெயின் மின் இணைப்பு பெட்டியிடம் சென்று பார்க்குமாறு அனுப்பி வைத்துவிட்டு, சிறிது நேரத்தில் அனைத்தையும் சரி செய்து விட்டேன் என கூறி அவசரமாக, இருசக்கர வாகனத்தில் சென்று விட்டார். இது திரிபுரசுந்தரிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, வீட்டில் பார்த்தபோது, அங்குள்ள ஹாலில் வைத்திருந்த தங்கத்திலான பிரேஸ்லேட், செயின், 3 மோதிரங்கள் என சுமார் 8 பவுன் நகைகளை அந்த நபர் திருடிச் சென்றது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், மின்வாரிய ஊழியர் என பொய்க்கூறி மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை திருடிச் சென்றது தண்டையார்பேட்டை, வ.உ.சி நகரைச் சேர்ந்த பாலாஜி என்ற லேப்டாப் பாலாஜி (36) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் நேற்று (ஜூன் 7) கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் பாலாஜி மீது ஏற்கெனவே ராமாபுரம், ராயப்பேட்டை, மணலி, பொன்னேரி, செம்மஞ்சேரி, சிட்லபாக்கம், கண்ணகி நகர், காசிமேடு சாஸ்திரி நகர் உட்பட சுமார் 15க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, மோசடி உட்பட மொத்தம் சுமார் 62 வழக்குகள் உள்ளது தெரியவந்தது.