கொடைக்கானலில் சாலையோரம் காரில் இறந்து கிடந்த மருத்துவ மாணவர்!

கொடைக்கானலில் சாலையோரம் காரில் இறந்து கிடந்த மருத்துவ மாணவர்!
Updated on
1 min read

கொடைக்கானல் அருகே பூம்பாறையில் சாலையோரம் நின்றிருந்த காரில் இறந்து கிடந்த மருத்துவ மாணவரின் உடலை மீட்டு, போலீஸார் விசாரிக்கின்றனர்.

திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் உள்ள வசந்த நகரைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் ஜோஸ்வா சாம்ராஜ் (29). இவர் சேலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.டி. படித்து வந்தார். ஜூன் 2-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர் வேடசந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், கொடைக்கானல் போலீஸார் மேல்மலைக் கிராமமான பூம்பாறை பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, சாலையோரம் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த காரை சோதனையிட்டனர். அதில் உள்ளே ஒருவர் இருப்பது தெரிந்தது. ஆனால், கார் கதவு தாழிடப்பட்டிருந்தது. இதனால், போலீஸார் கதவை உடைத்து பார்த்தபோது, இளைஞர் ஒருவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

உடலை மீட்ட போலீஸார், கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்த நபரின் அருகில் கடிதம் ஒன்றும் இருந்தது. அதில், அவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே இருந்தன. அதனடிப்படையில் நடத்திய விசாரணையில், தற்கொலை செய்தது வேடசந்தூரைச் சேர்ந்த மருத்துவ மாணவர் ஜோஸ்வா சாம்ராஜ் என்பதும், தனது படிப்புக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in