திருவள்ளூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த மகனை காப்பாற்ற முயற்சி செய்த தந்தை உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே கிணற்றுக்குள் விழுந்த மகனை காப்பாற்ற முயற்சி செய்த தந்தை உயிரிழப்பு
Updated on
1 min read

திருவள்ளூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த மகனை காப்பாற்ற முயன்ற தந்தை மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே மப்பேட்டை அடுத்துள்ள முதுகூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி (61). இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி, சிந்து என்ற மகள், சந்தோஷ் குமார் என்ற மகன் உள்ளனர். இந்நிலையில், கிராமத்தில் சமீப காலமாக குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படு கிறது. ஆகவே, ஜோதி தன் மகன் சந்தோஷ்குமாருடன் சேர்ந்து, குடிநீர் தேவைக்காக தன் வீட்டின் பின்புறமாக 3 அடி அகலம் மற்றும் சுமார் 30 அடி ஆழத்துக்கு 20 நாட்களுக்கு மேலாக கடுமையாக உழைத்து, கிணறு தோண்டியுள்ளார்.

அரசின் அனுமதியின்றி தோண்டப்பட்ட அந்த கிணற்றில் இருந்து, மின் மோட்டார் மோட்டார் மூலம் நீர் உறிஞ்சி தொட்டியில் சேமித்து, குடிநீர் தேவைக்காக அக்குடும்பத்தினர் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை கிணற்றில் இருந்து நீர் வராததால், கிணறு பகுதிக்குச் சென்ற சந்தோஷ்குமார், கால் இடறி கிணற்றுக்குள் விழுந்தார். இதையறிந்த ஜோதி, மகனை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்தார்.

அப்போது, மூச்சுத் திணறி ஜோதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, கிணற்றுக்குள் இருந்து சந்தோஷ்குமார் கூச்சலிட்டதையடுத்து, ஜோதியின் பக்கத்து வீட்டை சேர்ந்த பாலாஜி என்ற இளைஞர், கயிறு மூலமாக சந்தோஷை மீட்டார். தொடர்ந்து, சந்தோஷ் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, தகவலறிந்து சம்பவ இடம் வந்த பேரம்பாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஜோதியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக் காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, திருவள்ளூர் வட்டாட்சியர் ரஜினி காந்த் சம்பவ இடம் சென்று, ஆய்வு மேற்கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக மப்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in